பிரபல  எழுத்தாளர் எச்.ஜி.ரசூல் காலமானார்….ஒரு கட்டுரைக்காக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்…

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தால் ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்பட்ட பிரபல எழுத்தாளர்  எச்.ஜி.ரசூல்  மாரடைப்பால் காலமானார்.

எழுத்தாளர் ரசூல் குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர். கவிஞர், கட்டுரையாளர் என தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடம் பிடித்தவர். வஹாபியம் உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத கருத்த்துக்களை எதிர்த்து தொடர்ந்து இயங்கியவர்.


கடந்த 2007ஆம் ஆண்டு உயிர்மை மாத இதழில் இஸ்லாத்தில் குடி பற்றி கருத்துக்களை முன்வைத்து அவர் எழுதிய கட்டுரை ஒன்றிற்காக தக்கலை அஞ்சுவண்ணம் ஜம்மாத்தால் ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டார். ஆனால், அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெற்றியும் பெற்றார்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் பணி ஓய்வு பெற்று சொந்த ஊரான தக்கலையில் வசித்து வந்தார். சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ரசூல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ரசூல் காலமானார்.

மலாஞ்சி, உம்மா,  கருவண்டாய் பறந்து போகிறாள், தலித் முஸ்லிம், பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம் பிரதிகள், சூபி விளிம்பின் குரல், இஸ்லாமியப் பெண்ணியம் உள்ளிட்ட பல நூல்களை  ரசூல் எழுதியுள்ளார்.