Without taking action for 6 months the girl is trying to fire at the womans office office
வேலூர்
வேலூரில், காவலர் ஒருவர் தன் வீட்டை இடித்துவிட்டதாக புகார் கொடுத்து ஆறு மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயற்சித்தார்.
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்நாள் கூட்டம் நடந்தது. இதற்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் மக்கள் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேசன்கார்டு, குடிநீர் வசதி உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மனு கொடுக்கவந்த மக்களை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் காவலாளர்கள் தீவிர சோதனை நடத்தியபின்பே அவர்களை மனு கொடுக்கச் செல்ல அனுமதித்தனர்.
நாட்டறம்பள்ளி தாலுகா பாட்டன் வட்டம் புள்ளானேரி பகுதியைச் சேர்ந்த சீனிவாசனின் மனைவி ஞானலட்சுமி தனது மகன் சரவணன், மருமகள் பூர்ணிமா, பேத்தி திவ்யதர்ஷினி, பேரன் லிகேஷ் ஆகியோருடன் மனு கொடுப்பதற்காக வந்தார். அவர்கள் 5 லிட்டர் கேனில் மண்எண்ணெய்யும் உடன் கொண்டுவந்து உள்ளனர்.
ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் சட்டென்று ஞானலட்சுமி தன் மீதும், மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்ததும் அங்கிருந்த காவலாளர்கள் அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து மண்எண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் அவர்கள் மீது காவலாளர்கள் தண்ணீரை ஊற்றினர்.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் காவலாளர்கள் விசாரணை நடத்தியபோது, தங்களுக்கு சொந்தமான வீட்டை மூர்த்தி என்ற காவலர் இடித்து விட்டதாகவும், வீட்டில் இருந்த ஐந்து பவுன் நகையை காணவில்லை என்றும், பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆறு மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காததால் மன உளைச்சல் ஏற்பட்டு குடும்பத்துடன் தீக்குளிக்க வந்ததாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆட்சியரிடம் மனு கொடுக்க அவர்களை காவலாளர்கள் அழைத்து சென்றனர். அங்கு கோரிக்கை மனு கொடுத்த பின்பு, உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
