Without proof dont talk - High Court ordered to Rajendra Balaji
பால் கலப்படம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 24 ஆம் தேதி ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் சில தனியார் நிறுவனங்களின் பாலில் கலப்படம் செய்வதாக கூறியிருந்தார்.
இந்த பாலில் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதால், ஒரு வாரம் வைத்திருந்தாலும் கெட்டுப்போவதில்லை. இவ்வாறு தயாரிக்கப்படும் பாலை பருகுவதால், புற்றுநோய் ஆபத்து உள்ளதாகவும் கூறியிருந்தார்.
அதேபோல், ஆவின் பாலில் எந்த கலப்படமும் செய்வதில்லை என்றும், தமிழகத்தில் இருக்கும் பால் தேவையை ஆவின் நிறுவனம் பூர்த்தி செய்யும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், சில தனியார் நிறுவன பாலில் கலப்படம் இல்லை என்பது நிரூபித்தால், தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதோடு, தூக்கில் தொங்குவேன் என்றும் கூறியிருந்தார்.
பால் கலப்படம் குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு சில தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் பால் முகவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், ஹட்சன், டோட்லா, விஜய் பால் நிறுவனங்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பால் கலப்படம் குறித்து ஆதாரம் இன்றி பேசக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
