ஒவ்வொரு அரசு விடுமுறையின் முதல் நாளும் குடிமகன்களின் சுறுசுறுப்பான நாள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அடிக்கும் அடைமழையிலும் கூட்டம் இருப்பது, "யப்பா என்ன டெடிகேஷன்" என்று நம்மை சிந்திக்க வைக்கின்றது. ஆம், நேற்று சென்னையில் பெய்த அடை மழைக்கு நடுவில் ஒயின் ஷாப்களில் கூட்டம் குறையவில்லை. காரணம் இன்று சுதந்திர தினம்.

நேற்று, சென்னையில் மாலை நான்கு மணிக்கு ஆரம்பித்த மழை இரவு 11 மணி வரையிலும் இடைவிடாது பெய்து தீர்ந்தது. கேரளாவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை தொடர்ந்தது தமிழ்நாட்டில் பெய்துவரும் இந்த மழை மக்களை பெரிதும் பயமுறுத்தி வருகின்றது. ஆனால், நாட்டில் என்ன தான் நடந்தாலும் நான் என்னோட வேலையை சரியாக செய்து முடிப்பேன் என திரியும் குடிமகன்கள் அடை மழையிலும் ஒயின்ஷாப் வாசலில் நேற்று காத்துகிடந்தனர். 

பெரும்பாலும் அரசு விடுமுறை நாட்களில் ஒயின்ஷாப் திறக்கப்படுவதில்லை. இன்று சுதந்திர தினம் என்பதால் ஒயின்ஷாப் எங்கும் திறக்கப்படவில்லை. அதனால் "வருமுன் காப்போம்" என்ற பழமொழிக்கு ஏற்ப நேற்றே இரண்டு நாட்களுக்கும் தேவையான பானங்களை வாங்கி தங்களுடைய இடுப்பில் சொருகிக்கொண்டு சென்றனர் குடிமகன்கள். 

என்னவொரு டெடிகேஷன், என்னவொரு டெடிகேஷன்!