குஷ்புவுக்கு கல்தா: பாஜகவில் இணைகிறாரா நடிகை மீனா?
பிரதமர் மோடி கலந்து கொண்ட பொங்கல் பண்டிகையில் நடிகை மீனாவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் பேசுபொருளாகி உள்ளது
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தனது இல்லத்தில் கடந்த ஆண்டு நடத்திய பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் பங்கேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டும் தனது இல்லத்தில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு எல்.முருகன் ஏற்பாடு செய்திருந்தார். டெல்லியில் நேற்று நடந்த அந்த விழாவில், வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவில், தமிழ் பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், நடிகை மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக, பாஜக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான பாஜகவின் முக்கிய பிரமுகர் நடிகை குஷ்பு கலந்து கொள்ளாத அந்த நிகழ்ச்சியில், நடிகை மீனா கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அத்துடன், பிரதமர் மோடி கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் நடிகை மீனாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக அந்த அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறுகின்றனர். அதாவது, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு அடுத்தப்படியாக நடிகை மீனாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாம். நடிகை மீனாவுக்கு முதல் வரிசையில் இடம் அளிக்கப்பட்டதாகவும், வானதி சீனிவாசனுக்கு அதற்கு பின் வரிசையில்தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள். மேலும், அந்த நிகழ்ச்சியில் பொங்கல் வைக்கும் போது, பிரதமர் மோடிக்கு அருகில் மீனா நின்றிருந்தார். அவருக்கு அருகே கலா மாஸ்டரும் இருந்தார். பிரதமரை பார்த்ததும் உற்சாகத்தில் தனது செல்போனை எடுத்து படம் பிடித்து தனது மகிழ்ச்சியையும் மீனா வெளிப்படுத்தினார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: விசிக தலைவர் திருமாவளவன் காளை வெற்றி!
பாஜகவில் அதிகாரப்பூர்வமாக நடிகை மீனா இல்லாத நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், விரைவில் அவர் பாஜகவில் இணையவுள்ளதாக யூகத்தை கிளப்பியுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக வட்டாரங்களிடம் விசாரித்தபோது, “பிரதமர் மோடி கலந்து கொண்ட பொங்கல் விழா மத்திய அமைச்சர் எல்.முருகன் ஏற்பாட்டால் நடத்தப்பட்டது. யாரை அழைக்க வேண்டும், யாரை தவிர்க்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்துள்ளார். நடிகை குஷ்புவை விழாவுக்கு அழைக்காமல், நடிகை மீனாவை அவர் ஏன் அழைத்தார் என்பதில் எங்களுக்கே ஆச்சரியம்தான்.” என்கின்றனர்.
நடிகை மீனா பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்விக்கு, இதுவரை அதுபோன்ற தகவல் எதுவும் எங்களிடம் இல்லை; நடிகை மீனாவை பாஜகவில் சேர்க்க எல்.முருகன் முயற்சிக்கிறாரோ என தோன்றுகிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பாஜகவில் திரைநட்சத்திரங்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மாநில தலைவராக எல்.முருகன் இருந்தபோது கட்சியில் இணைந்தவர்கள். அந்த வரிசையில், நடிகை மீனாவும் கட்சியில் இணைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். அதேசமயம், மாநிலத் தலைவராக அண்ணாமலை இருக்கும் வேளையில், நடிகைகள் காயத்திரி ரகுராம், கவுதமி போன்றோர் கட்சியில் இருந்து விலகினர் என்பதும் கவனிக்கத்தக்கது.