Jothimani vs Selvaperunthagai: ஜோதிமணி பதிவை இப்போது தான் பார்த்தேன். அதைப்பார்த்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன் என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் நிலவுவது உலகத்துக்கே தெரியும் நிலையில், அக்கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜோதிமணி காங்கிரஸ் கட்சி அழிவுப்பாதையில் செல்கிறது என தனது மனக்குமுறலை கொட்டி விட்டார். ''எந்த ஒரு அரசியல் கட்சியும், தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை, தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலை கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது.
ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஜோதிமணி
ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரசில் நடைபெறும் விசயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது'' என்று ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அழிவின் பாதையில் செல்லும் காங்கிரஸ்
''தமிழ்நாடு காங்கிரசில், எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல்,மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல் கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு,ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது'' என்றும் ஜோதிமணி தனது ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.
ஜோதிமணி தமிழக காங்கிரஸின் தூண்
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ஜோதிமணியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த செல்வபெருந்தகை, ''ஜோதிமணியின் பதிவை இப்போது தான் பார்த்தேன். அதைப்பார்த்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். ஜோதிமணி தமிழக காங்கிரஸின் தூணாக இருக்கிறார். மன வருத்தத்தில் இருக்கும்போது இதுபோல் ஒரு சில பதிவுகள் போடுவது சகஜம் தான்.
பிரச்சனை இருந்தது உண்மைதான்
கரூரில் தேர்தல் படிவம், முகவர் நியமனம் ஆகியவற்றில் பிரச்சனை இருந்தது உண்மைதான். இது தொடர்பாக ஜோதிமணி ஏற்கெனவே அளித்த புகாரை டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளேன். அங்கிருந்து இதுவரை பதில் ஏதும் வராத நிலையில், ஜோதிமணியின் பதிவு அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக அவரிடம் பேசி அறிந்து கொள்வோம்'' என்று தெரிவித்தார்.


