கள்ளிச் செடிகளுக்கு காயம் பட்டாலே கலங்கிப் போவேன்; இத்தனை மனிதத் தளிர்கள் தீக்கு இரையானதையும், பெருந்துயர் கொண்டதையும் நினைத்து கலக்கமடைகிறேன் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்து 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 40 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை, பாலவாக்கத்தில் இயங்கி வந்த சென்னை ட்ரெக்கிங் கிளப் மூலமாக மலையேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

மலையேற்றத்துக்குப் பிறகு இவர்கள் திரும்பும்போது, காட்டுத்தீயில் சிக்கினர்.  காட்டுத்தீயின் தாக்கத்தால், ஒன்றாக வந்தவர்கள், தனித்தனியாக பிரிந்து
சென்றுள்ளனர். அதில் இதுவரை 27 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த நிலையில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயில் இருந்து தப்பிக்க அங்கிருந்த பள்ளத்தில் குதித்து
தப்பித்ததாக உயிர் பிழைத்தவர்கள் கூறினர்.

காட்டுத்தீயில் சிக்கியவர்கள் குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜ அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட தீவிபத்து பற்றிக் கேள்விப்பட்டபோது, என் நெஞ்சுக் கூட்டுக்குள் நெருப்பு பற்றிக் கொண்டதாய் நினைக்கிறேன். தேனி மாவட்டம், அன்பிற்கும் ஈரத்திற்கும் மட்டுமே பெயர் பெற்றது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட தீவிபத்து, எங்கள் மாவட்டத்திற்கே ஆறாத காயத்தை ஏற்படுத்திவிட்டது என கூறியுள்ளார்.

கள்ளிச் செடிகளுக்கு காயம் பட்டாலே கலங்கிப் போவேன். இத்தனை மனிதத் தளிர்கள் தீய்க்கு இரையானதையும், பெருங்காயம் பட்டுப் பெருந்துயர் கொண்டதையும் நினைத்துக் கலக்கமடைகிறேன். இந்த வெப்ப நேரத்தில் எப்படி தீப்பற்றியது என்பது திகைப்புதான். மூங்கிலோடு மூங்கில் உரசினாலே தீப்பற்றிக் கொள்ளும் என்பது உண்மை. 

இருந்தாலும், சமூக விரோதிகள் யாரேனும் இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்கள் குணமடையவும் பிரார்த்திக்கிறேன் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.