Wild elephants invade at night Farmers fear

கிருஷ்ணகிரியில் இரவு நேரங்களில் ஊருக்குள் வரும் நான்கு காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதமடைவதை எண்ணியும், யானைகளுக்கு பயந்தும் விவசாயிகள் மற்றும் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஏ.செட்டிப்பள்ளி காட்டுப்பகுதியில் நான்கு காட்டு யானைகள் கடந்த பல நாள்களாக சுற்றி வருகின்றன. இந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் அருகிலுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து அங்குள்ள விவசாய பயிர்களை சாப்பிடுகின்றன. நடந்து செல்லும் யானையின் காலில் மிதிப்பட்டு பயிர்கள் சேதம் அடைகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புலியரசி கிராமத்திற்குள் நான்கு யானைகளும் நுழைந்த பின்னர் நாகராஜ், சந்திரன் ஆகிய விவசாயிகளின் நிலங்களுக்குள் சென்று அங்கு பயிரிட்டிருந்த தக்காளி, வாழை உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதமாக்கின.

மேலும் மா மரக்கிளைகளை ஒடித்தும் யானைகள் சேதப்படுத்தின. பின்னர் அந்த யானைகள் அங்கிருந்து காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டன.

நேற்று காலை விவசாய நிலத்திற்கு வந்த நாகராஜ், சந்திரன் ஆகியோர் யானைகளால் பயிர்கள் சேதமடைந்து இருப்பதைக் கண்டு கவலை அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த நான்கு யானைகளும் விவசாய பயிர்களை சேதம் செய்து வருவதால், ஏ.செட்டிப்பள்ளி, எலிசேபள்ளி, குண்டுகுறுக்கி, பாப்பனப்பள்ளி, புலியரசி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர்.

இந்த நான்கு காட்டு யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.