மருதமலையில் நோய்வாய்ப்பட்ட தாய் யானைக்கு 4 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தது. 

கோவையில் தாய் யானை உயிரிழப்பு : கோவையை சுற்றியுள்ள காட்டுபகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளது. அந்த வகையில் அவ்வப்போது ஊருக்குள் வருவதும் வனத்துறையினர் யானையை காட்டிற்குள் விரட்டும் நிகழ்வும் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் மருதமலை கோயில் அருகே குட்டியோடு வந்த தாய் யானை ஒன்று நடக்க முடியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரே இடத்தில் நின்றது. அடுத்த சில மணி நேரங்களில் திடீரென மயங்கி கீழே விழுந்தது. இது தொடர்பாக வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்த நிலையில்,

கும்கி யானை உதவியோடு காட்டுயானைக்கு சிகிச்சை

கடந்த 17-ம் தேதி கும்கி யானை உதவியுடன் தாய் யானையை கிரேன் மூலம் பெல்ட்டால் இணைத்து யானையை தூக்கி நிறுத்தினர். அப்போது தாய் யானையை நெருங்க விடாமல் அருகே குட்டி யானை பாசப்போராட்டம் நடத்தியது. நீண்ட நேரத்திற்கு பிறகு மற்றொரு யானை கூட்டத்துடன் குட்டி யானை வனத்துக்குள் சென்றுவிட்டது. இதனையடுத்து வனக் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், சதாசிவம், சுகுமார் ஆகியோர் மேற்பார்வையில் தாய் யானைக்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது யானை நன்றாக உணவு எடுத்துக்கொண்டது மேலும் யானையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

யானையை கிரேன் மூலம் தூக்கி நிறுத்திய வனத்துறை

நேற்று காலை யானைக்கு பசும் தீவனம், பழங்கள், தண்ணீர் வழங்கப்பட்டன. ஆனால் சரியான வகையில் சாப்பிடாத யானை சிறிதளவு பழங்களை மட்டும் உட்கொண்டது. அடுத்ததாக யானையின் உடல் நிலை முன்னேற்றத்திற்காக தற்காலிகமாக தொட்டி அமைக்கப்பட்டு அதில் தண்ணீரை நிரப்பி யானைக்கு நீர் சிகிச்சை அளித்தனர். ஆனால் யானையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலை நீடித்தது. மேலும் யானையின் தொண்டை மற்றும் வாய்ப்பகுதியில் புண் ஏற்பட்டிருந்தது. இதனை சரிசெய்ய யானையின் காது, நரம்பு மூலமாக மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. 100 பாட்டில்களுக்கு மேல் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

யானை உயிரிழப்பு- காரணம் என்ன.?

இந்த சூழ்நிலையில் நேற்று மதியம் யானை திடீரென உயிரிழந்தது. யானை உயிரிழப்பு தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தாய் யானை அதன் நோய் தீவிரம் காரணமாக இறந்திருக்கலாம் எனவும் திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தனர். யானையின் உடல் பிரேத பரிசோதனை வன மருத்துவர்கள் மேற்கொண்டனர். இதன் அறிக்கையில் தான் யானை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.