Elephant : குட்டியை சேர்த்துக்கொள்ளாத தாய் யானை.. முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்ட குட்டி யானை.!! காரணம் என்ன.?
மருதமலை வனப்பகுதிக்குள் கடந்த ஒரு வார காலமாக தாய் யானையை பிரிந்து சுற்றி வந்த குட்டியானையை மீண்டும் யானை கூட்டத்தோடு சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்ததையடுத்து முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட யானை
கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை குட்டியோடு கடந்த வாரம் எழுந்திருக்க முடியாமல் படுக்கிடந்தது. இதனை பார்த்த வனத்துறையினர் பெண் யானைக்கு தொடர் சிகிச்சை அளித்தனர். இரண்டு நாட்களுக்கு பிறகு பெண் யானையை கிரேன் உதவியோடு தூக்கி நிறுத்தி வைத்தனர். அப்போது 3 மாதமுள்ள குட்டியானையும் தாய் யானை அருகில் இருந்து வந்தது. இரவு நேரத்தில் யானையின் சகோதர குடும்ப யானை கூட்டத்தோடு காட்டிற்குள் சென்றது.
மறுநாள் இரவு சிகிச்சை பெற்று வந்த தாய் யானையை பார்த்த சென்ற குட்டியானை திடீரென தனியாக வனப்பகுதியில் சுற்றி வந்தது. இதனையடுத்து தாய் யானை உடல் நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில் குட்டியானையை தாய் யானையோடு சேர்க்க வனத்துறையினர் தொடர் முயற்சி மேற்கொண்டனர்.
தவிக்கும் குட்டி யானை
ஆனால் தாய் யானை குட்டியை பார்த்தும் சேர்த்துக்கொள்ளாமல் காட்டிற்குள் சென்றுவிட்டது. இதனையடுத்து மற்ற யானை கூட்டத்தோடு குட்டியானையை சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் மற்ற யானைகளும் குட்டியானையை சேர்த்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாக குட்டியானையை வனப்பகுதிக்குள் விடும் முயற்சி தோல்வி அடைந்தது. இதனையடுத்து 5 நாட்கள் முயற்சிக்கு பிறகு தஇன்று அதிகாலை குட்டி யானை முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.
யானை குட்டியை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றி, அதற்கு தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு, மருத்துவர் குழுவின் பாதுகாப்பில் வனத்துறையினர் குட்டி யானையை, முதுமலையானை முகாமிற்கு கொண்டு சென்றனர். இதனிடையே குட்டி யானை மீது மனிதர் வாடை இருப்பதால் குட்டியை மற்ற யானை கூட்டங்கள் சேர்த்துக்கொள்ளவில்லையென வனத்துறையினர் சார்பில் தகவல் கூறப்படுகிறது.
வால்பாறை அருகே தும்பிக்கை இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் வாழ்க்கைக்காக போராடும் யானை!!