புதுக்கோட்டை
 
புதுக்கோட்டையில், கடத்தப்பட்ட காதல் கணவரை மீட்டுத்தர வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறிய அவரது மனைவி தனக்காக மக்களையும் போராட அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள பாசிப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி (22). பட்டதாரியான இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். 

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கீரனூர் அனைத்து மகளிர் காவலாளர்கள் முன்னிலையில் இருவருக்கும் பதிவு திருமணம் நடந்தது. 

இந்த நிலையில் மணிகண்டனும், வினோதினியும் கோயம்புத்தூருக்கு சென்று கடந்த இரண்டு மாதங்களாக அங்கு குடும்பம் நடத்தி வந்தனர். அதன்பின்னர் இவரும் கடந்த மாதம் கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு கீரனூருக்கு வந்தனர். 

அப்போது திடீரென காரில் வந்த சிலர் மணிகண்டனை கடத்தி சென்றுவிட்டனர். இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வினோதினி புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து மணிகண்டனை காவலாளர்கள் தேடி வருகின்றனர். 

அதன்பின்னர் வினோதியின் பெற்றோரை வரவழைத்து அவரிடம் வினோதினியை காவலாளர்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு வினோதினி கீரனூரில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தின் மீது திடீரென ஏறி நின்றுகொண்டு மணிகண்டனுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும், கடத்தி சென்றவர்களிடம் இருந்து அவரை மீட்டுத்தர வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதுகுறித்து தகவலறிந்த கீரனூர் காவல் ஆய்வாளர் இம்மானுவேல் இராயப்பன், காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் காவலாளர்கள், தீயணைப்பு நிலை அலுவலர் செல்லத்துரை தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

அதன்பின்னர் அவர்கள் வினோதினியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர் மணிகண்டன் வந்தால் மட்டுமே கீழே இறங்குவேன் என்று திட்டவட்டமாக கூறினார். 

இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். பின்னர் மதியம் 2 மணி அளவில் வினோதினி, "நான் கீழே இறங்கி வருகிறேன். ஆனால், நீங்கள் எனக்காக பேருந்து மறியலில் ஈடுபட்ட வேண்டும்" என்று பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தார். 

இதற்கு அங்கிருந்த பொதுமக்கள், "நீ கீழே இறங்கி வா. உனக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்" என கூறினர். இதனையடுத்து செல்போன் கோபுரத்தில் இருந்து வினோதினி கீழே இறங்கி வந்தார். 

அதன்பின்னர் காவலாளர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அறிவுரை கூறி, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். வினோதினியின் காதல் கணவர் மணிகண்டன் குறித்தும் காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.