மைத்துனியை திருமணம் செய்வதற்காக மனைவியை கொலை செய்துவிட்டு, மாரடைப்பில் இறந்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே புலவன்விளையை சேர்ந்தவர் டேவிட் சாமுவேல் (31), பிளம்பர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், எப்சிபாய் (26) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சில மாதங்களுக்கு முன்பு டேவிட் சாமுவேல் சொந்தஊருக்கு வந்தார்.
எப்சிபாய்க்கு ஒரு தங்கையும், ஒரு தம்பியும் உள்ளனர். அவரது தந்தை இறந்துவிட்டனர். இதனால் ஆதரவின்றி தவித்த தம்பி, தங்கையை, அக்கா எப்சிபாய் வீட்டில் தஞ்சமடைந்தனர். எப்சிபாயும், அவரது தங்கையும் பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளனர்.
எப்சிபாயின் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். சில வாரங்களாக டேவிட் சாமுவேல், மைத்துனியை தினமும் வேலைக்கு கொண்டு சென்று விடுவது வழக்கம். அப்போது, மைத்துனி மீது, இவருக்கு மோகம் ஏற்பட்டது. இதனால், அவரைதிருமணம் செய்ய திட்டமிட்டார். இதற்காக மனைவியை கொலை செய்யவும் முடிவு செய்தார்.
கடந்த 28ம் தேதி இரவு டேவிட் சாமுவேல், மனைவியுடன் ஒரு அறையிலும், மற்றவர்கள் வீட்டின் மற்றொரு பகுதியிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை டேவிட் சாமுவேல், எப்சிபாய் மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறாள் என கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் மற்றும் மைத்துனி ஆகியோர் ஓடிவந்தனர். அங்கு சென்று பார்த்தபோது எப்சிபாய் இறந்து கிடப்பது தெரியவந்தது.
அவர்களிடம் டேவிட் சாமுவேல், தனது மனைவி ஆர்ட் அட்டாக் ஏற்பட்டு இறந்ததாக கூறினார். எப்சிபாய் இரவில் நெஞ்சு வலியால் அலறி துடித்ததாகவும், பின்னர் மாத்திரை சாப்பிட்டுவிட்டு தூங்கியவர் அப்படியே இறந்துவிட்டதாகவும் கூறினார். ஆனால், அவரது நடவடிக்கையில் எப்சிபாயின்உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தனா. போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பிரேத பரிசோதனையில் எப்சிபாய் மாரடைப்பால் இறக்கவில்லை, கழுத்தில் கயிறால் இறுக்கப்பட்டு மூச்சுகுழாய் உடைந்து இறந்ததுதெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டேவிட் சாமுவேலை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அதில், மைத்துனியை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், மனைவியை கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன் என அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து போலீசார், டேவிட் சாமுவேலை கைது செய்தனர்.
