தர்மபுரியில் மனைவி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு விஷம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு மற்றும் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டியைச் சேர்ந்தவர் ரசூல் (43). லாரி ஓட்டுநர். அமமுகவில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி அம்முபீ (35). இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 5ம் தேதி இரவு வீட்டில் உணவு சாப்பிட்டு தூங்க சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இரண்டு முறை வாந்தி எடுத்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் ரசூல் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசூல் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து தனது மனைவியின் செல்போனை சோதனை செய்யுமாறு கூறியுள்ளார்.

அதில் அதே ஊரில் சலூன் கடை நடத்தி வரும் லோகேஸ்வரன் (26) என்பவருடன் அம்முபீ கள்ளத்தொடர்பில் இருந்து வந்தது மட்டுமல்லாமல் வாட்ஸ் அப்பில் பேசிய ஆடியோவும் இருந்தது. அதில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பாட்டுடன் கலந்து கணவருக்கு கொடுத்ததாகவும், அதில் ஒன்றும் ஆகாததால், மாதுளை ஜூசில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து ரசூல் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 16ம் தேதி லோகேஸ்வரன், அம்முபீயை கைது செய்தனர். விசாரணையில், லோகேஸ்வரனுடன் 6 ஆண்டுகளாக அம்முபீ கள்ளத்தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது.

இந்நிலையில் உல்லாசத்திற்கு இடையூறாக இருக்கும் ரசூலை கொலை செய்யும் நோக்கத்தில் திட்டமிட்டு உணவு, ஜூசில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது. இதனிடையே மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரசூல் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.. இதையடுத்து, அம்முபீ, லோகேஸ்வரன் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.