துணியில் கட்டி வீசிய விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை செய்து கொலை செய்ததை கண்டுபிடித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி, சுபிஷ்கா கார்டனை சேர்ந்தவர் ராஜேந்திரன் லாரி டிரைவர். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு நந்தகுமார் என்ற மகன் உள்ளார். அவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கார் ஒர்க்‌ஷாப் வைத்துள்ளார்.

ராஜேந்திரனும், புஷ்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பிரிந்து வாழ்கின்றனர். ராஜேந்திரன் திருப்பூரில் தங்கி இருந்து லாரி ஓட்டி வந்தார்.நந்தகுமாரும் பெருமாநல்லூரில் தங்கி உள்ளார். எனவே புஞ்சைபுளியம்பட்டியில் புஷ்பா மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் புஷ்பாவின் வீட்டுக்கு முன்பு காலி இடத்தில் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் அரை நிர்வாண நிலையில் பனியன் துணியால் சுற்றப்பட்டு, கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. முகம் சாக்கு பையால் மூடப்பட்டு இருந்தது.

தகவல் அரித்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ராஜேந்திரனை கொலை செய்தது யார்? என தீவிர விசாரணையில் இறங்கிய போது, புஷ்பாவின் வீட்டுக்கு முன்பு பிணம் கிடந்ததால் புஷ்பாவிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் பிணமாக கிடப்பது யார் என எனக்கு தெரியாது என்று புஷ்பா கூறினார்.

அவரது மகன் நந்தகுமார் வந்து அடையாளம் காட்டிய பின்னர்தான் கொலையானது கணவர் ராஜேந்திரன் என்பதை புஷ்பா ஒப்புக்கொண்டார்.இந்நிலையில், புஷ்பா முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், புஷ்பா மீது போலீசாரின் சந்தேக கண் விழுந்தது. இதனையடுத்து, புஷ்பாவிடம் கிடுக்குப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் சிக்கியுள்ளது.

முதலில், போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அப்போது ராஜேந்திரனின் பிணத்தை மோப்பம் பிடித்த மோப்ப நாய் நேராக புஷ்பாவின் வீட்டுக்குள் ஓடியதால் போலீசார் உறுதி செய்தனர்.எனவே புஷ்பாவை சுற்றியே போலீசாரின் விசாரணை இருந்தது. முதலில் நடந்ததை மறுத்தாலும் ஒரு கட்டத்தில் உண்மையை புஷ்பா ஒப்புக்கொண்டார். மது போதையில் அடிக்கடி வந்து செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கணவரை புஷ்பா கொன்றது விசாரணையில் தெரிய வந்தது.

மதுவுக்கு அடிமையான ராஜேந்திரனுக்கும் புஷ்பாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் ஏற்பட்டு வந்த தகராறு காரணமாக கடந்த 15 வருடங்களுக்கு முன்பே இருவரும் பிரிந்தனர். பின்னர் புஷ்பா மகனை வளர்த்து ஆளாக்கி அவரது வருமானத்தில் ஒரு நிலைக்கு வந்தார். ஆனால் ராஜேந்திரன் டிரைவராக வேலை பார்த்து தொடர்ந்து மதுவுக்கு அடிமையானவராகவே இருந்து வந்தார்.

குடும்பத்துக்கு எந்த வகையிலும் உதவாதவராக இருந்து வந்த ராஜேந்திரனை புஷ்பா முற்றிலும் வெறுத்தார். ஆனால் சமீப காலமாக ராஜேந்திரன் புஞ்சைபுளியம்பட்டிக்கு அடிக்கடி வந்து புஷ்பாவுக்கு தொல்லை கொடுத்து வந்தார். குடும்பத்துடன் சேர்ந்து வாழ அவருக்கு ஆசை இருந்தது. ஆனால் புஷ்பா ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இருந்தாலும் மனைவியின் மனதை கரைக்க ராஜேந்திரன் முயற்சித்து வந்தார்.

ஆனால், முடியாததால் நேற்று முன்தினம் இரவு சாணிப்பவுடர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சாணிப்பவுடர் குடித்ததை புஷ்பாவிடம் கூறினார். ஆனால் அதை புஷ்பா நம்பவில்லை. எனவே புஷ்பாவிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்ட்டதால் பின்னர் குளியலறைக்குள் சென்றதும் குழாயில் தண்ணீர் வராமல் புஷ்பா அடைத்துவிட்டார்.2 மணி நேரம் கழித்து சென்று பார்த்தபோது ராஜேந்திரன் மயக்க நிலையில் பாதி உயிருடன் கிடந்தார். அப்போதும் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த புஷ்பா சாக்கு பையை எடுத்து ராஜேந்திரனின் முகத்தை மூடியதும் இதில் மூச்சு திணறிய ராஜேந்திரன் இறந்தார். அவரது உடல்கூட தனது வீட்டுக்குள் கிடக்கக்கூடாது என்ற வெறி புஷ்பாவிடம் இருந்தது.

எனவே ராஜேந்திரனின் உடலை துணியால் சுற்றி, கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு போய் காலி இடத்தில் போட்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.பிரேத பரிசோதனை அறிக்கையிலும் ராஜேந்திரன் மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டதால் புஷ்பா மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.