Asianet News TamilAsianet News Tamil

கணவர் இறந்து 45 வருடங்களுக்கு பிறகு மனைவிக்கு வாரிசு சான்றிதழ்; இப்பவாச்சும் கொடுத்தீர்களே! 

wife got certification after 45 years of her husband death
wife got certification after 45 years of her husband death
Author
First Published May 23, 2018, 8:33 AM IST


மதுரை
 
மதுரையில் கணவர் இறந்து 45 வருடங்களுக்கு பிறகு வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த மனைவிக்கு வாரிசு சான்றிதழை தாசில்தார் வழங்கினார்.

ஒருவர் இறந்த பிறகு சொத்துப் பரிவர்த்தனை, பாகப் பிரிவினை, அரசு சலுகைகள், வங்கிக் கணக்கு மாற்றம், எல்.ஐ.சி. பாலிசி முதிர்வுத் தொகை, தபால் நிலைய கணக்கு உள்ளிட்டவற்றுக்காக வாரிசு சான்றிதழ் பெறப்படுகிறது. 

பெற்றோர், மனைவி, மகன், மகள் ஆகியோர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம். இதற்காக தாலுகா அலுவலகங்களில் ரூ.2 கோர்ட்டு கட்டண ஸ்டாம்பு ஒட்டி விண்ணப்பித்தால் போதும். 

ஒருவர் தான் வசிக்கும் பகுதியில் இருந்து கூட வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்துடன் ரேசன் கார்டு, இறப்பு சான்றிதழ் ஆகியவற்றை இணைத்தால் போதுமானது. 

விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் கிராம வருவாய் அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பரிசீலனை செய்து தாசில்தாருக்கு அனுப்ப வேண்டும். அவர் சரிபார்த்த பின்னர் உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். 

ஆனால், பெரும்பாலான வாரிசு சான்றிதழ்கள் ஆண்டுக் கணக்கில் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. அத்துடன், இதற்காக செயல்படும் புரோக்கர்கள் வாரிசு  சான்றிதழுக்காக ரூ.10 ஆயிரம் வரை பணம் வசூலிப்பதாகவும் புகார் எழுகிறது.

இந்த நிலையில், மதுரை மேற்கு தாலுகாவில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாங்கப்படாமல் இருந்த வாரிசு சான்றிதழ்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, மதுரை வடக்குமாசி வீதியைச் சேர்ந்த பிச்சை என்பவரது மனைவி தனலட்சுமி (85). இவரது கணவர் கடந்த 1973-ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.

இதற்காக வாரிசு சான்றிதழ் கேட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. 

இந்த நிலையில், தாசில்தார் பாலாஜியை சந்தித்து தனது குறைகளை தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி, வாரிசு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

பொன்னகரத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர், தனது தந்தை இறந்தபின் வாரிசு சான்றிதழ் கேட்டு 6 மாதங்களுக்கு முன் விண்ணப்பித்துள்ளார். பின்னர் கடந்த மாதம் தாசில்தாரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து நேற்று அவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios