Asianet News TamilAsianet News Tamil

ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கு தாமதம் ஏன்? விளக்குகிறார் மாவட்ட வழங்கல் அதிகாரி…

why the-delay-in-issuing-the-smart-card-district-supply
Author
First Published Dec 30, 2016, 8:46 AM IST


ஈரோடு,

ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காமல் பலர் இருக்கின்றனர் என்பதால் தான் ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் தாமதமாகி உள்ளது என்று மாவட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்தார்.

தமிழ்நாடு முழுவதும் 2017-ஆம் ஆண்டு முதல் ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கப்பட இருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு வேகமாக செயல்படுத்தி வருகிறது. இதன் முதல் கட்டமாக அனைத்து ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் இணைக்கப்படுறது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்பது தாலுகாக்களிலும் கடந்த 7-ஆம் தேதி முதல் ஒவ்வொரு வீடாகச் சென்று ரேஷன் கார்டுகளை 1279 களப்பணியாளர்கள் சரிபார்த்து வருகின்றனர்.

ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்கின்றனவா? ரேஷன் கார்டில் பெயர்கள் சரியாக உள்ளனவா? என்பது குறித்து சரிபார்க்க இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் ரேஷன் கார்டில் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தால் தாங்கள் வைத்திருக்கும் எந்திரம் மூலம் ஆதார் எண்ணை அவர்களே ரேஷன் கார்டில் இணைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்ட வழங்கல் அதிகாரி சுப்பிரமணியன் ஈரோடு வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். நகர் இரண்டாவது வீதியில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், பொதுமக்களிடம் இருந்து ரேஷன் கார்டுகளை வாங்கி, அதில் களப்பணியாளர்கள் சரியாக பணிபுரிந்து உள்ளனரா? என்று ஆய்வு நடத்தினார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 7 இலட்சத்து 72 ஆயிரம் ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. இந்த கார்டுகளுக்கு 1132 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கார்டில் இன்னும் ஆதார் எண்ணை இணைக்காமல் பலர் உள்ளனர். அதனால் ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. எனவே, ரேஷன் பொருட்கள் வாங்க பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்க உள்தாள் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைத்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.’ என்று அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios