TN Assembly: இந்த ஆண்டும் உரையை வாசிக்காமல் வெளியேறினார் ஆளுநர் ரவி..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டும் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.என். ரவி உரையைப் புறக்கணித்து அவையை விட்டு வெளியேறினார்.

சட்டப்பேரவை நடைமுறை
தமிழகத்தில் நடைபெறக்கூடிய மாநில அரசு சார்ந்த அனைத்து நிகழ்ச்சியின் போதும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு, நிகழ்ச்சி நிறைவடையும் போது தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். இதே நடைமுறை தான் தமிழக சட்டமன்றத்திலும் பின்பற்றப்படுகிறது.
ஆளுநர் போர்க்கொடி
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இதனை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய ஆளுநர் ரவி, தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடனேயே தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மேலும் இந்த காரணத்தை சுட்டிக்காட்டி சட்டமன்ற கூட்டத்தொடரையும் புறக்கணித்து அவர் வெளிநடப்பும் செய்துள்ளார்.
இந்த ஆண்டும் அவையை புறக்கணித்த ஆளுநர்
அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இன்றைய கூட்டத்தொடர் தொடக்கத்திலும், தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்ட பின்னர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கோபமடைந்த ஆளுநர் என்னை அவமதித்துவிட்டீர்கள் என்று கூறி உடனடியாக அவையை விட்டு வெளியேறினார். ஆளுநரின் நடவடிக்கையால் தமிழக சட்டப்பேரவையில் சலசலப்பு உருவானது.
ஆளுநர் பதவிக்கு அழகல்ல
இந்நிலையில், ஆளுநரின் வெளிநடப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் உரையை முறையாக வாசிக்காமல் இடையூறு செய்வது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல. இது இங்கு மட்டும் நடைபெறவில்லை. இருப்பினும் மரபு காரணமாக ஆளுநரின் உரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதனைக் கடந்து மீண்டும் ஆளுநர் வெளிநடப்பு செய்துள்ளார்.
அரசியல் செய்யும் ஆளுநர்
மாநில நிர்வாகத்தை முடக்கவும், பொது இடங்களில் அரசியல் பேச ஆளுநர் முயல்கிறார். அது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதனை தமிழக சட்டமன்றத்திலும் நடத்த நினைப்பது நல்லதல்ல. முன்னதாக ஆளுநரின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்ட உரையை அவர் ஏற்கனவே அனுமதி அளித்த காரணத்தால் அது இந்த அவையில் வாசிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.

