சென்னைக்கு சனிக்கிழமை அன்று வருகை தந்த நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்துவிட்டு சென்றார்.

நிர்மலா சீதாராமனைத் தான் தமிழகத்தின் பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளராக்க அக்கட்சி மேலிடம் காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது தமிழகத்திற்கு வந்து செல்கிறார் நிர்மலா சீதாராமன். தமிழகம் என்றால் சென்னைக்கு மட்டும் வந்து செல்வது இல்லை இவர். ராமநாதபுரம் வரைக்கும் கூட சென்று அங்குள்ள கட்சி நிர்வாகிகளை சந்திப்பது நிர்மலாவின் வழக்கம்.

அந்த வகையில் சென்னை மற்றும் மதுரையில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நிர்மலா சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். வழக்கமாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் நிர்மலா, இந்த முறை பிற்பகலில் சந்திப்பதாக கூறிவிட்டு சென்றார். நேராக ஆவடிக்கு சென்று நிர்மலா சீதாராமன், அங்கு தயாரிக்கப்பட்ட டாங்கிகளுக்கான என்ஜின்களை ராணுவத்திடம் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சிக்கு பிறகு நிர்மலா செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்ககப்பட்டது. ஆனால் செய்தியாளர்களுக்கு டாடா காட்டிவிட்டு நேராக ஆழ்வார்பேட்டையில் கலைஞர் அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார் நிர்மலா சீதாராமன். அங்கு ஸ்டாலின், கனிமொழியை சந்தித்து கலைஞர் உடல் நிலை குறித்து விசாரித்துவிட்டு சத்தம் இல்லாமல் புறப்பட்டுவிட்டார். அங்கும் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் நிர்மலா சந்திக்கவில்லை. இதன் பிறகு மதுரை விமான நிலையம் வந்திறங்கிய நிர்மலாவை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

ஆனால் தனக்கு நிகழ்ச்சிக்கு நேரமாகிவிட்டது என்று கூறிவிட்டு புறப்பட்டார் நிர்மலா. இப்படியாக தமிழகத்தில் ஒரு நாள் முழுவதும் இருந்தும் நிர்மலா செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றார். இதற்கு காரணம் செய்தியாளர்கள் ஓ.பி.எஸ்சை சந்திக்க மறுத்தது குறித்து கேள்வி எழுப்புவார்கள் என்பது ஒரு புறம். மறுபுறம், ராணுவ ஹெலிகாப்டரை ஓ.பி.எஸ் சகோதரர் பயன்படுத்த அனுமதித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப கூடும் என்கிற அச்சம் தான், செய்தியாளர்களை நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் தவிர்த்ததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.