கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அகற்றப்பட்ட பிள்ளையார் கோயில்: இதுதான் காரணம்!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பிள்ளையார் கோயில் அகற்றப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ‘கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தை அண்மையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பொங்கல் பண்டிகைக்கு பின்னர் முழு பயன்பாட்டுக்கு வரவுள்ள இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 2,310 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்லும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், ஒரு சாரார் அதிருப்தி தெரிவித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பணிகள் நடந்து வரும் நிலையில், பேருந்து நிலையம் திறக்கப்பட்டதையடுத்து அவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதாகவும், பேருந்து நிலையத்தில் அவசியம் குறித்தும் பலரும் அவர்களுக்கு பாதிலடி கொடுத்து வருகின்றனர்.
அதேசமயம், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு போதிய இணைப்பு வசதி இல்லை என்பதும் உண்மை. அதேசமயம், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பேருந்து நிலையத்துக்கு எதிரே தெற்கு ரயில்வே சார்பில் ரயில் நிலையம் அமையவுள்ளது. மத்திய அரசு அனுமதி கொடுத்தவுடன் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படவுள்ளது. இதுபோன்ற வசதிகள் ஒவ்வொன்றாக செய்யப்படவுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் திறக்கப்பட்டது முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பிள்ளையார் கோயில் அகற்றப்பட்டுள்ளதும் சர்ச்சையாகியுள்ளது.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில், தற்போது காவல் நிலையமாக மாற்றப்பட்ட புறக்காவல் நிலையத்தின் அருகே பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது. இந்த நிலையில், அக்கோயில் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 15ஆவது முறையாக நீட்டிப்பு!
ஆனால், அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் வழிபாடு தளங்கள் இருக்கக் கூடாது என கோயில் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததாலேயே பிள்ளையார் கோயில் அங்கிருந்து அகற்றப்பட்டதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதேஇடத்தில் இதற்கு முன்னர் இருந்த மாதா கோயிலும் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளது.
“அந்த இடம் ஏற்கனவே தனியார் வசம் குத்தகைக்கு இருந்தது. அந்த இடத்திற்கு அந்த தனியார் உரிமை கோரியது. ஆனால், இதுதொடர்பான வழக்கில் இந்த இடம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அங்கிருந்த உலக அமைதி மாதா கோவில் மற்றும் மண்டபம் உள்ளிட்ட கட்டுமானங்கள் புதிய பேருந்து நிலையத்துக்காக அகற்றப்பட்டன. ஆனால், பிள்ளையார் கோயில் மட்டும் அப்படியே விடப்பட்டதால், ஒப்பந்ததாரர்களால் சிறிய அளவில் புணரமைக்கப்பட்டிருந்தது. அரசுக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் அக்கோயிலை அகற்ற வேண்டும் என தொடர்ந்து புகார் மனுக்கள் வந்ததால், பிள்ளையார் கோயில் அகற்றப்பட்டுள்ளது.” என சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.