விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முன்னால் ஆட்டுத் தோல் வியாபாரியான செய்யாத்துரை மற்றும் அவரது இரண்டாவது மகன் நாகராஜனுக்குச் சொந்தமானது எஸ்பிகே நிறுவனக் குழுமம்.

தமிழக அரசின் சாலை மற்றும் கட்டுமான ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டுவரும் இந்நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் நேற்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தியது வருமான வரித் துறை சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக சென்னை, மதுரை, பாளையங்கோட்டை உட்பட தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை தொடர்ந்தது. இதில் 163 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 101 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கத்தை மதிப்பிடும் பணியில் கூடுதல் ஆட்கள் தேவைப்பட்டதால், மேலும் சில அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இரண்டாவது நாளாக, இன்றும் அருப்புக்கோட்டை பாலையம்பட்டியிலுள்ள செய்யாத்துரையின் வீடு, கமுதியிலுள்ள அவரது பூர்வீக வீடு, சென்னையிலுள்ள போயஸ் தோட்ட வீடு, பங்குதாரர்கள் வீடு, எஸ்பிகே நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை தொடரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மெகா ரெய்டு எடப்பாடியை நோக்கி நடத்தப்படும் தாக்குதல் என சொல்லப்பட்டாலும் எப்படி இந்த  எஸ்.பி.கே நிறுவனமும், செய்யாத்துரையும் எடப்பாடிக்கு வீசப்பட்ட வலையில் சிக்கினார் என்பது தெரியவந்துள்ளது.

எடப்பாடியின் நெருங்கியவருக்கு சொந்தமான இந்த எஸ்.பி.கே. நிறுவனத்தின் சார்பில் மும்பையில் ஒரு வங்கியில் 250 கோடி ரூபாய் கடன் கேட்டிருக்கிறார்கள். அதே வங்கியில் கோவையைச் சேர்ந்த கான்ட்ராக்டர் ஒருவரும் கடன் கேட்டிருக்கிறார். அவருக்கு பேப்பர்கள் சரியாக இருந்ததால் உடனடியாக கடன் கொடுத்துவிட்டார்கள்.

ஆனால், தமிழக அரசின் டெண்டர்களை வாரிக் குவித்து வைத்திருக்கும் எஸ்.பி.கே. நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்டிருந்த பேப்பர்களில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்ததால் கடன் வழங்க மறுத்துவிட்டனர். அந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் இருக்கும் முரண்பாடுகளைக் கண்டறிய அந்த வங்கிக் கடன் விவகாரமும் ஒருவகையில் உதவியிருக்கிறதாம். அதனால் ரெய்டுக்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள்.