சேலம்,

தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசின் நிலை நீடித்தால் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே, சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க பல்வேறு மாணவ அமைப்புகள் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதனால், தமிழகத்தில் கட்டாயம் சல்லிக்கட்டை நடத்தியே ஆக வேண்டும் என்பது அனைத்து மக்களும் வலியுறுத்தலாக இருக்கிறது.

இந்நிலையில் சல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சேலத்தில் மாணவர்கள் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மாணவர் இளைஞர் பேரவை சார்பில் நேற்று காலை சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க தவறிய மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைப்பெற்றது.

வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று திரண்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ – மாணவிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

போராட்டத்திற்கு தமிழ்நாடு மாணவர் இளைஞர் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ்வரன் தலைமை தாங்கினார்.

இதில் பங்கேற்ற மாணவ – மாணவிகள் சல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கூறுகையில், ‘‘சல்லிக்கட்டு மீதான தடையை நீக்காவிட்டால், தடையை மீறி நிச்சயமாக சல்லிக்கட்டை நடத்தியே தீருவோம். இதனால், ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சந்திக்க தயாராக உள்ளோம்.

உச்ச நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்தும் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு மறுப்பதைபோல, உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறி இந்த ஆண்டு சல்லிக்கட்டை நடத்தியே தீருவோம்” என்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே, மதியம் 12.30 மணிக்கு சேலம் செரிசாலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ – மாணவிகள் திடீரென்று வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்து சாலையில் திரண்டனர்.

பின்னர் கல்லூரி நுழை வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாணவர் அமைப்பை சேர்ந்த ஜீவா, ஆசீப், சிவா, பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றிட வேண்டும் என்றும் போராட்டத்தின்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்த சேலம் அஸ்தம்பட்டி காவலாளர்கள் விரைந்து வந்து மாணவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் போராட்டம் நடத்தி விட்டு மாணவ – மாணவிகள் கலைந்துச் சென்றனர்.