ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும்  போது தனக்கு யார் வாரிசு என அறிவித்துவிடுவாரோ என பயந்ததால்தான், சசிகலா ஜெயலலிதாவை யாரும்  சந்திக்க விடவில்லை என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி  ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது மருத்துமனையில் என்னென்ன நடந்தது என பட்டியலிட்டார்.

சிகிச்சை பெறும் ஜெயலலிதாவை பார்க்க ஓபிஎஸ் முதல் அனைவருமே விரும்பினோம்…அவரது உடல் நிலை எப்படி உள்ளது என அறிய நினைத்தோம்…ஆனால் எங்கள் அனைவரையும் சசிகலா சந்திக்க விடவில்லை என தெரிவித்தார்.

ராகுல் காந்தி, அருண் ஜெட்லி போன்றவர்களே ஜெயலலிதாவை சந்திக்க முடியாத போது நாங்கள் எம்மாத்திரம் என அவர் கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா உடல்நிலை மோசமானபோது, அவரை நாங்கள் சந்தித்தால் கட்சிக்கும், ஆட்சிக்கும் யாரையாவது அவர் வாரிசாக நியமித்துவிடுவாரோ என அஞ்சி, யாரையும் சசிகலா சந்திக்க விடவில்லை என குற்றம்சாட்டினார்.

 ஜெயலலிதாவை மட்டுமல்ல அப்பலோ மருத்துவமனையையே சசிகலா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.