விருதுநகர்

விருதுநகரில், பயிர் காப்பீட்டுத் தொகை செலுத்தியவர்களுக்கு இதுவரை நிவாரணத் தொகை தராதது ஏன்? என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், "நெல் பயிருக்கு காப்பீட்டு தொகை செலுத்தியும் இதுவரை ஏராளமான விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. ஒரு சிலருக்கு மிகவும் குறைவான தொகையே வழங்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை கடந்த ஒராண்டாக மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடத்தாமல், ஏதாவது காரணத்தைச் கூறி தள்ளிப் போடுவது சரியல்ல.

மாவட்ட ஆட்சியர் வர முடியாவிட்டால் ஏன் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும்?

காப்பீட்டு தொகை வழங்க காலதாமதமானால் அதற்கு வட்டியுடன் சேர்த்து தரவேண்டும்" என்று வலியுறுத்தினர்.

அவர்களை, மாவட்ட வருவாய் அலுவலர் சமாதானப்படுத்தினார். அதேபோல,
"பல ஆண்டுகளாக கரும்புக்கு பயிர் காப்பீடு இல்லை. மேலும், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் மக்காச்சோளம் நன்கு விளைந்துள்ளது. ஆனால், அதற்கு ஏற்ற கட்டுபடியான விலை இல்லை. இதனால், விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

எனவே, மத்திய அரசு நிர்ணயித்துள்ள ரூ.1450 கிடைக்க உத்தரவாதம் தர வேண்டும். அல்லது  மக்காச்சோளம் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு, "காப்பீட்டு தொகை விரைந்து கிடைக்கவும், மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை கூட்டம் நடத்தப்படும். மக்காச்சோளம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்த்குமார் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மணிசேகரன், வேளாண்மை துணை இயக்குநர்  பு. ஜோசப் மரிய ரெக்ஸ், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ஜெகதீசன்,

கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் உமாமகேஸ்வரி மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.