Asianet News TamilAsianet News Tamil

கடைகளை மூடி முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய வியாபாரிகள்…

wholesale shop-business-men-paid-tribute-to-the-cm
Author
First Published Dec 7, 2016, 10:41 AM IST


கடலூர்,

 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி, கடலூர் மாவட்டத்தில் வியாபாரிகள் நேற்று கடைகளை மூடி அஞ்சலி செலுத்தினர். ஊரே வெறுமையாய் இருந்தது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவினால் திங்கள்கிழமை இரவு மரணம் அடைந்தார். சென்னை மெரீனா கடற்கரையில் அவரது உடல் செவ்வாய்க்கிழமை ஏராளமான மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு அடக்கம் செய்யப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்திலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் அடைத்திருந்தன.

அதேபோல் கடலூர் மாவட்டத்தில் கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், மருந்துக்கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. உழவர்சந்தை மற்றும் காய்கறி சந்தைகளும் அடைத்திருந்தன.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் ஓடவில்லை. இதனால் பேருந்து நிலையங்கள், பஜார்கள், சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறுமையாய் கிடந்தது.

கடலூரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையமும் வெற்றிடமாகவே காணப்பட்டது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அடைத்திருந்தன. லாரன்ஸ் சாலையில் நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும், விடுதிகளும் அடைத்திருந்ததால் லாரன்ஸ் சாலையும் வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் பாரதிசாலை, நேரு சாலை, இம்பீரியல் சாலை, செம்மண்டலம் சாலை என அனைத்து முக்கிய சாலைகளும் மக்கள் நடமாட்டமில்லாமல் இருந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திரையரங்குகளில் காட்சிகள் இரத்து செய்யப்பட்டு இருந்ததால், திரையரங்குகளும் மூடிக்கிடந்தன.

விருத்தாசலத்தில் பாலக்கரை, பெரியார்நகர், கடைவீதி, பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சிதம்பரம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சிதம்பரம் நகரில் தேரோடும் நான்கு வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் காசுக்கடை தெரு வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இதுதவிர, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, திட்டக்குடி என மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Follow Us:
Download App:
  • android
  • ios