திண்டுக்கல்,

உங்களின் ஆதரவு யாருக்கு? என்று தொகுதி மக்களிடையே நிலக்கோட்டை எம்.எல்.ஏ தங்கத்துரை முகநூலில் கருத்து கேட்டார்.

தமிழகத்தின் ஆட்சியை யார் பிடிப்பது? என்று ஓபிஎஸ்-க்கும், சசிகலாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இவர்கல் இருவருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை, அந்தந்த தொகுதி வாக்காளர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதனிடையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. தங்கத்துரை முகநூலில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி மக்கள் தங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யலாம்’ என்று கூறியுள்ளார்.

இதற்கு பலரும் தங்களது விருப்பத்தை பதிவு செய்துள்ளனர். பெரும்பாலானோர் ஓபிஎஸ்-க்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், ஒருசிலர் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றும் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.