யார் இந்த பொற்கொடி? 20 வயது மூத்தவரை விரும்பி திருமணம் செய்துகொண்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி!
பட்டியலின மக்களுக்காகத் தொடர்ந்து பாராடி வந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் திருமணம் செய்துகொண்டால் தன்னுடைய தீவிர அரசியல் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என நினைத்தார். 20 வயது இளையவரான வழக்கறிஞர் பொற்கொடி தான் ஆம்ஸ்ட்ராங்கின் மனதை மாற்றினார்.
பட்டியலின மக்களுக்காகத் தொடர்ந்து பாராடி வந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் இளவயதிலேயே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்டார். அக்கட்சியின் தேசியத் தலைவரான மாயாவதியின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார். தலித் சமூகத்தினரின் உரிமைக்காக பொது வாழ்க்கையில் ஈடுபட்ட அவர் தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்பதையும் உணர்ந்திருந்தார். பாதுகாப்புக்காக தேசிய உரிமம் பெற்ற இத்தாலிய துப்பாக்கி ஒன்றையும் எப்போதும் தன் கைவசம் வைத்திருந்தார்.
திருமணம் செய்துகொண்டால் தன்னுடைய தீவிர அரசியல் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என்றும் ஆம்ஸ்ட்ராங் கருதினார். இதனால், திருமணமே செய்துகொள்ள வேண்டாம் என்ற முடிவில் இருந்தார். தந்தை கிருஷ்ணனும் தாய் லில்லியும் எவ்வளவோ வற்புறுத்தியும் திருமணத்திற்கு சம்மதிக்கவே இல்லை.
இந்த நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங்கை விட 20 வயது இளையவரான பொற்கொடி என்பவர் தான் அவரது மனதை மாற்றினார். திருநாவுக்கரசு - விஜயலட்சுமி தம்பதிக்கு மூத்த மகளாகப் பிறந்த பொற்கொடி சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார். அண்ணல் அம்பேத்கர் மீது கொண்ட பற்றினால் அவரது வழியில் பொற்கொடியும் பௌத்த மதத்தைத் தழுவினார்.
பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகிலேயே உருவாக்கி இருந்த புத்த விகாருக்கு பொற்கொடியும் அடிக்கடி வந்து செல்வார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் சமூகச் செயல்பாடுகளும், பௌத்த பண்பாட்டில் கொண்ட ஈடுபாடும் பொற்கொடியை மிகவும் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்.
அண்ணாமலை கலர் பச்சோந்தி! துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான்: இபிஎஸ்
தனது தந்தை திருநாவுக்கரசர் மூலம் ஆம்ஸ்ட்ராங்கிடம் பேசி அவரது சம்மதத்தையும் பெற்றார். முதலில் தனது பொது வாழ்க்கையில் உள்ள சவால்களைக் கூறி மறுத்த ஆம்ஸ்ட்ராங் பொற்கொடியும் அம்பேத்கர் மீது கொண்டவர் என்பதால் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார். இதனால் 44 வயதில் ஆம்ஸ்ட்ராங்கின் திருமணம் நடைபெற்றது.
2016ஆம் ஆண்டு ஆம்ஸ்ட்ராங் - பொற்கொடி இருவருக்கும் பௌத்த மத வழக்கப்படி திருமணம் நடைபெற்றது. சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித சார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் தமிழகத்தின் தலித் இயக்கத் தலைவர்களான திருமாவளவன், பூவை. ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருமணத்துக்குப் பின் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பெங்களூரில் நடைபெற்ற புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆம்ஸ்ட்ராங் - பொற்கொடி தம்பதிக்குப் பிறந்த குழந்தைக்கு சாவித்திரி பாய் என்று பெயர் சூட்டினார். அம்பேத்கரின் அரசியல் குருவான சாவித்திரி பாய் பூலேயின் பெயர் தங்கள் மகளுக்கு வைக்கப்பட்டதில் இருவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருமணமான பிறகு ஆம்ஸ்ட்ராங்குடன் சேர்ந்து பொற்கொடியும் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வழக்கறிஞர் பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.