Asianet News TamilAsianet News Tamil

யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்? எம்.ஜி.ஆரின் வலதுகரம்; ரஜினிக்காக ஜெயலலிதாவை பகைத்துக் கொண்டவர்!

எம்ஜிஆர் என்றால் ஆர்.எம்.வீரப்பனை மறக்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் இருவருக்கும் இடையே பாசப்பிணைப்பு நிலவியது

Who is RM Veerappan close aide to MGR and the one who fought Jayalalitha for Rajinikanth smp
Author
First Published Apr 9, 2024, 3:47 PM IST

எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98. வயது மூப்பு காரணத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஆர்.எம். வீரப்பன் காலமானார். முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றிய ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எம்ஜிஆர் - ஆர்.எம்.வீரப்பன் நட்பு

ஆர்.எம்.வீ என்று அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன், புதுக்கோட்டை மாவட்டத்தின் வல்லதிராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர் ஆவார். ஆர்.எம்.வீ என்றாலே முதலில் எம்.ஜி.ஆர்தான் நினைவுக்கு வருவார். ஆனால், ஆர்.எம்.வீரப்பன் முதலில் பேரறிஞர் அண்ணாவிடம் உதவியாளராக இருந்து பின்னர் பெரியார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரிடம் பணியாற்றிவர். ஆர்.எம்.வீரப்பனை திருப்பி அனுப்ப முடியாது என்று பெரியார் சொல்லும் அளவுக்கு வீரப்பனுக்கு இருந்த நற்பெயரைப் பார்த்தே எம்ஜிஆர் வேண்டி விரும்பி அழைத்தன் பெயரில் எம்ஜிஆரிடம் வந்து சேர்ந்தவர்தான் ஆர்.எம்.வீரப்பன்.

அதன்பின்னர் இருவருக்குமான உறவு ஊர் அறிந்தது. எம்ஜிஆர் என்றால் ஆர்.எம்.வீரப்பனை மறக்கவே முடியாது. எம்ஜிஆருக்கும் ஆர்.எம்.வீரப்பனுக்கும் இடையில் அப்படியொரு பாசப்பிணைப்பு நிலவியது. ஆர்.எம்.வீயை உதவியாளர் என்ற கோணத்தில் வைத்து எம்.ஜி.ஆர். பார்த்ததில்லை. அவருக்கு உரிய மரியாதையை எம்ஜிஆர் எப்போதும் கொடுக்க தவறியதில்லை.

சுயமரியாதை இயக்கம் முதல் நாடகமேடை வரை... படிப்படியாக வளர்ந்த ஆர்.எம்.வீரப்பனின் குடும்பப் பின்னணி!

1953ஆம் ஆண்டில் தான் துவங்கிய எம்ஜிஆர் நாடக மன்றம் மற்றும் எம்ஜிஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு நிர்வாக பொறுப்பாளராக ஆர்.எம்.வீரப்பனை எம்ஜிஆர் நியமித்திருந்தார். அதன் பிறகு, 1963ஆம் ஆண்டில் சத்யா மூவிஸ் என்ற பெயரில் திரைப்பட நிறுவனம் ஒன்றை ஆர்.எம்.வீரப்பன் துவங்கினார்.

நாடோடி மன்னன் படத்திற்கான கடன் பத்திரங்களில் எம்ஜிஆரின் சார்பாகக் கையெழுத்திட்டவர் வீரப்பன்தான். எம்ஜிஆர் யார் படங்களில் நடிக்கலாம், எத்தககைய கதையைத் தேர்ந்தெடுக்கலாம், எம்ஜிஆரை யார் இயக்கலாம் என்பனவற்றையெல்லாம் முடிவு செய்யும் அதிகாரமிக்கவராக வலம் வந்தவர் அவர்.

அதிமுகவின் அதிகார பலம்
அதிமுக என்ற தனிக் கட்சியை எம்ஜிஆர் துவங்குவதற்கு பின்னணியில் பல்வேறு பணிகளை செய்த ஆர்.எம்.வீரப்பன், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக வலம் வந்த அவர், அம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பை வகித்துள்ளார். 1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடல் நலக்குறைவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாத போது, தேர்தல் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஆர்.எம்.வீரப்பன் ஈடுபட்டார்.

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக பிளவுபட்டபோது, 98 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் எம்ஜிஆரின் மனைவி வி.என்.ஜானகியை முதலமைச்சராக பதவியில் அமர வைக்க ஆர்.எம்.வீரப்பன் முக்கிய பங்காற்றினார். அதன்பிறகு, ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட இணக்கம் காரணமாக அதிமுகவில் இணைந்த அவர், ஜெயலலிதா அமைச்சரவையில் பல்வேறு துறைகளின் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

ரஜினிக்காக ஜெயலலிதாவுடன் பகை

நடிகர் ரஜினிகாந்தின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ‘பாட்ஷா’ படத்தைத் தயாரித்ததற்காக ஆர்.எம்.வி.யை நினைவுகூருவார்கள். ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் நிறுவனம் தான் ரஜினி நடித்த பாட்ஷா திரைப்படத்தை தயாரித்தது.  பாட்ஷா பட வெள்ளி விழாவில் பேசிய ரஜினிகாந்த், “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது” என்று பேசி தமிழகத்தை அதிர செய்தார். ரஜினியின் இந்த பேச்சு அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர உதவியது. ஆர்.எம்.வியின் தூண்டுதலின் பேரில் ரஜினிகாந்த் அப்படி பேசியதாக கூறப்படுகிறது. இதனால், திடீரென்று அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆர்.எம்.வீ., அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார். அதன்பின்னர், எம்.ஜி.ஆர். கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995ஆம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பன் நிறுவினார்.

மக்கள் திலகத்தின் "வேட்டைக்காரன்".. படத்திலிருந்து நீக்கப்பட்ட "கன்னடத்து பைங்கிளி" - என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான ஆர்.எம்.வீரப்பன், கடந்த பல ஆண்டுகளாகவே உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையிலும், வீட்டில் இருந்தபடியும் சிகிச்சைகள் மேற்கொண்டு வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

Follow Us:
Download App:
  • android
  • ios