முறைகேடு புகாரில் கைதான பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன்.! ஆளுநர் ரவியை சந்தித்தது ஏன்.? யார் இவர்.?
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை முறைகேடு வழக்கில் போலீசார் கைது செய்து ஜாமினில் உள்ள நிலையில், ஆளுநர் ரவியை வரவேற்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
துணை வேந்தர் ஜெகநாதன்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவர், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, விதிகளை மீறி சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. மேலும் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக துணைவேந்தரே தனி நிறுவனம் தொடங்கியிருப்பது விதிமீறல் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜெகநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க திட்டமிட்டனர். ஆனால் நீதிபதி ஜாமின் வழங்கியதையடுத்து தொடர்ந்து துணை வேந்தராக நீடித்து வருகிறார். இந்தநிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பெரியார் பல்கலைக்கழகத்திற்கு நேற்று வருகை தந்தார்.
யார் இந்த ஜெகநாதன்.?
அங்கு முறைகேடு புகாரில் கைதாகி ஜாமீனில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனை தொடர்ந்து இருவரும் தனியாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், முறைகேடு வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள நிலையில், பூட்டர் அறக்கட்டளை நிர்வாகிகளாக இருந்த அவரது கூட்டாளிகள் தங்கவேலு, சதீஷ், ராம் கணேஷ் தலைமறைவு ஆகியுள்ளார்.
தலைமறைவான 3 பேருக்கு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்தநிலையில் யார் இந்த ஜெகநாதன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதல்வராக இருந்த டாக்டர் ராமசாமி ஜெகநாதன், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
சர்ச்சையில் சிக்கிய ஜெகநாதன்
39 வருட கற்பித்தல் அனுபவத்துடன், ஜெகநாதன் 55 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 14 கட்டுரைகளை சர்வதேச அளவில் சமர்ப்பித்துள்ளார். இவருக்கு 2017 ஆம் ஆண்டில், இந்தியாவில் வேளாண் வானிலை ஆராய்ச்சிக்கான சேவைக்கான விருது ஜெகநாதனுக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் மீது பல்வேறு புகார்களும் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்து வருகிறது அந்த வகையில், பருவ தேர்வு வினாத்தாளில் சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டிருந்த சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியது. முதுகலை வரலாறு இரண்டாமாண்டு தேர்வு வினாத்தாளில், நான்கு சாதிப் பெயர்களை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் எது தாழ்த்தப்பட்ட சாதி எனக் கேள்வி இடம்பெற்றுள்ளது. இதற்கு துணை வேந்தர் ஜெகநாதனே காரணம் என கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றனர்.
ஜெகநாதன் யாருடைய உறவினர்
மேலும் சேலம் பெரியார பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருப்பு சட்டை அணியக்கூடாது என உத்தரவிட்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும். வேதசக்தி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-ன் புராண கருத்தரங்கத்தையும் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்த அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை கொண்ட துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வருவதாகவும், அந்த வகையில் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஜெகநாதனை துணை வேந்தராக நியமிக்கப்பட்டதாக அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே துணை வேந்தர் ஜெகநாதன் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனின் உறவினர் என கூறப்படுகிறது. சேலத்தில் மிகப்பெரிய மருத்துமனை ஒன்றின் உரிமையாளுரும் இவரும் உறவினர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்