யார் இந்த எ.வ.வேலு? பேருந்து நடத்துனர் டூ பொதுப்பணித்துறை அமைச்சர்!
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவர் குறித்த தேடல் அதிகரித்துள்ளது
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தலைநகர் சென்னை மற்றும் திருவண்ணாமலை என ஒரே நேரத்தில் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் என பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அத்துடன், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் போன்ற துறைகளையும் அவர் கவணித்து வருவதால், அது சார்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை என இரு முக்கியமான துறைகளின் அமைச்சராக உள்ள எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருவதால், அவர் குறித்த தேடல் அதிகரித்துள்ளது. இன்று இரண்டு முக்கியத்துறைகளின் அமைச்சராகவும், 2001 முதல் தற்போத் வரை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருக்கும் எவ வேலு, ஒரு காலத்தில் பேருந்து நடத்துனராக இருந்தால் என்றால் நம்ப முடிகிறதா?
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்திலுள்ள குடலூர் கிராமத்தில் 1951ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி பிறந்தவர் எவ வேலு. ஆரம்பகாலத்தில் பம்ப்செட் மோட்டார் சரிபார்க்கும் வேலை பார்த்த இவர், பின்னர் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற தாமோதரன் பஸ் சர்வீஸில் நடத்துநராக வேலை பார்த்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
நாயுடு சமூகத்தை சேர்ந்த எவ வேலு, கலைஞர் கருணாநிதி உயிரோடு இருந்த வரை அவருக்கும், அதன்பிறகு, முதல்வர் ஸ்டாலினுக்கும் நெருக்கமாக இருந்தாலும், தனது அரசியல் வாழ்க்கையை அதிமுகவில் ஆரம்பித்தவர். எம்ஜிஆர் ரசிகரான எவ வேலு, 1972ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். கூடிய விரைவில் தனது பணியால், அதிமுகவில் அப்போதைய முன்னணித் தலைவராக இருந்த ப.உ.சண்முகத்தின் மனதில் இடம்பெற்று 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற எ.வ.வேலு, எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜானகி அணியில் இணைந்தார். ஆனால், ஜெயலலிதா தலைமையில் கட்சி வந்ததும் அதிமுகவில் இருந்து விலகினார்.
அதன்பிறகு, நடிகர் பாக்யராஜ் கட்சி ஆரம்பித்தபோது, அதன் கொள்கை பரப்புச் செயலாளராகப் பதவிவகித்தார். பின்னர், அந்தக் கட்சி காணாமல் போனதால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைய முயன்றார். ஆனால், அது சரிவரவில்லை. இதையடுத்து திமுகவில் இணைந்த அவருக்கு அன்றிலிருந்து ஏறுமுகம்தான். தண்டராம்பட்டு தொகுதியில் 2001 மற்றும் 200இல் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு அதிமுகவை வீழ்த்தினார். பின்னர் திருவண்ணாமலை தொகுதிக்கு மாறி, 2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தார்.
மறைந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான 2006-2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலுவுக்கு, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் முக்கியமான பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவராக வலம் வரும் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில்தான் வருமான வரித் துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.