காட்பாடி,
சென்னையில் இருந்து புறப்பட்ட திருவனந்தபுரம் விரைவு இரயிலில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது காட்பாடி இரயில் நிலையத்தை அடைந்ததும் வெடித்துச் சிதறும் என்றும் வந்த மர்ம அழைப்பால் இரயில் நிலையமே பதறியது.
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு இரயில் வெள்ளிக்கிழமை மாலை 3.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் இயில் நிலைத்தில் இருந்து புறப்பட்டது. சுமார் 4.20 மணிக்கு சென்னை சென்டிரல் இரயில் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் “திருவனந்தபுரம் விரைவு இரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனவும், இரயில் காட்பாடி இரயில் நிலையம் சென்றதும் வெடித்து சிதறும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். உடனே இதுகுறித்து அரக்கோணம் மற்றும் காட்பாடி இரயில் நிலைய அதிகாரிகளுக்கு சென்னையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரயில் அரக்கோணம் வந்ததும் இரயில்வே பாதுகாப்புப்படை காவலாளர்கள் இரயிலில் ஏறினர். அவர்கள் ஓடும் இரயிலில் சோதனை செய்தபடி வந்தனர்.
இந்த நிலையில் காட்பாடி இரயில்நிலைய மேலாளர் மதிவாணன் திருவனந்தபுரம் விரைவு இரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை காட்பாடி துணை காவல் சூப்பிரண்டு முரளிதரன், இரயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ், வெடிகுண்டு நிபுணர் கார்த்திகேயன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ், சி.எம்.சி. உதவி மைய நிர்வாகி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.
காட்பாடி துணை காவல் சூப்பிரண்டு முரளிதரன் தலைமையில் 50 காவலாளர்கள் இரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர். தீயணைப்பு வாகனம், ஆம்புலன்சுகளும் இரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இரயில்வே மண்டல உதவி பொறியாளர் சேகர், 5 வெடிகுண்டு நிபுணர்கள், 20 இரயில்வே பாதுகாப்புப்படை காவலாளர்கள், வருவாய்த் துறையினர் ஆகியோர் திருவனந்தபுரம் விரைவு இரயில் வருகைக்காக காட்பாடி இரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
இரயில் மாலை 5.30 மணிக்கு காட்பாடி இரயில் நிலையத்திற்கு வந்தது. உடனே காட்பாடி காவல்துறையினர், இரயில்வே பாதுகாப்பு படை காவலாளர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் 22 இரயில் பெட்டிகளிலும் ஏறி சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மூலமும், காவல் மோப்பநாய் டைகரை வைத்தும் சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டது.
பயணிகளில் பலர் ஐயப்பசாமிக்கு மாலை அணிந்திருந்தனர். அவர்களின் பைகளும் சோதனை செய்யப்பட்டது. வெடிகுண்டு சோதனை நடக்கும் தகவலை அறிந்தவுடன் இரயில் பெட்டிகளில் இருந்து பயணிகள் பலர் பீதியுடன் கீழே இறங்கி பிளாட்பாரத்தில் நின்றனர். சுமார் 40 நிமிடங்கள் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மாலை 6.18 மணிக்கு காட்பாடியில் இருந்து இரயில் புறப்பட்டு சென்றது.
திருவனந்தபுரம் விரைவு இரயிலில் வெடிகுண்டு சோதனை நடந்ததால் முதல் பிளாட்பாரம் வழியாக செல்ல வேண்டிய லால்பாக் விரைவு இரயில் 3–வது பிளாட்பாரம் வழியாக திருப்பி விடப்பட்டது. சோதனை முடியும் வரை 2–வது பிளாட்பாரத்திலும் இரயில்கள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
வழக்கமாக திருவனந்தபுரம் விரைவு இரயில் காட்பாடி இரயில் நிலையத்திற்கு மாலை 5.03 மணிக்கு வரும். ஆனால், நேற்று வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அரை மணி நேரம் தாமதமாக 5.32 மணிக்கு வந்தது. அங்கு 40 நிமிடங்கள் சோதனை நடத்தப்பட்டது. இதனால் வழக்கமான நேரத்தைவிட 1¼ மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
திருவனந்தபுரம் விரைவு இரயிலில் நடந்த வெடிகுண்டு சோதனையால் காட்பாடி இரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
