கிருஷ்ணகிரி

ஓசூரில் குடிவெறியில் மகளை கற்பழிக்க முயற்சித்தபோது தடுத்ததால் மனைவி மற்றும் மகளை அம்மிக்கல்லால் கொலை செய்தேன் என்று கைது செய்யப்பட்ட கணவர், காவலாளர்களிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள அஞ்செட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேசாத்திரி (38). சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி குமுதா (34). இவர் பைல்காடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

இதில் 15 வயதான மூத்த மகள் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பும், மற்ற இரண்டு மகள்களும் முறையே 8-ஆம் வகுப்பு, மற்றும் 6-ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.

வழக்கமாக சேசாத்திரி மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் ஒரு அறையிலும், மூன்று மகள்கள் மற்றொரு அறையிலும் தூங்குவர்.

நேற்று முன்தினம் வழக்கம்போல குமுதா வேலையை முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு வந்தார். இரவு சாப்பிட்டுவிட்டு குமுதா மகள்களுடன் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரம் இரவு குடிபோதையில் சேசாத்திரி வீட்டிற்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சேசாத்திரியின் வீட்டில் இருந்து குமுதா மற்றும் அவரது மூத்த மகள் ஆகியோரின் அலறல் சத்தம் கேட்டது. இதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்துச் சென்று பார்த்தபோது குமுதா மற்றும் அவரது மூத்த மகள் ஆகியோர் கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.  அவர்களின் அருகில் அம்மிக்கல் கிடந்தது.

அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் இதுகுறித்து அஞ்செட்டி காவலாளர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், காவலாளர்கள் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டுக் கிடந்த குமுதா மற்றும் அவரது மூத்த மகள் ஆகியோரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் நடத்திய விசாரணையில், “மனைவி குமுதா மற்றும் மூத்த மகளை குடிபோதையில் சேசாத்திரி கொலை செய்துள்ளார்” என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சேசாத்திரியை காவலாளர்கள் கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து கைதான சேசாத்திரியிடம் காவலாளர்கள் நடத்திய விசாரணையில், “குடிபோதையில் வீட்டிற்கு வந்த சேசாத்திரி நள்ளிரவு 1 மணி அளவில், தனது மகள் என்றும் பாராமல் மூத்த மகளை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது மகளின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த குமுதா, கணவர் சேசாத்திரியை தடுக்க முயற்சித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சேசாத்திரி தனது மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார். பிறகு மூத்த மகளின் மீதும் அம்மிக்கல்லை தூக்கி போட்டு அவளையும் கொலை செய்துவிட்டார்.

இதன்பிறகு காவலாளர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கியாஸ் சிலிண்டரை திறந்து பற்ற வைத்து குமுதா மற்றும் மகள் ஆகியோர் இறந்ததாக நாடகமாட திட்டமிட்டுள்ளார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் வந்ததால் சேசாத்திரி அங்கிருந்து தப்பியோடி உள்ளார்” என்று விசாரணையில் தெரியவந்தது.