கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் உள்ளிட்ட பணியிடங்கள் எப்போது நிரப்படும் என்பது குறித்து வரும் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உயர்கல்வித் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் கோவையில் முன்னாள் துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் ஊழல் வழக்கில் கைது  செய்யப்பட்டார்.

தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் உயர்கல்வித் துறை மீது சுமத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் ராஜாசெல்வன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழகத்தில் உள்ள 8-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்படுவதுடன், பல்வேறு பணிகளும் நடைபெறாமல் முடங்கியுள்ளதாகவும் அதில் கூறியுள்ளார். 

புதிதாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர முயலும் மாணவர்களும், ஏற்கனவே பயின்று கொண்டிருக்கும் மாணவர்களும் பாதிப்படைவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு தரப்பில் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.

துணை வேந்தர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்பது குறித்து வரும் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.