ஒத்தையாக நின்று வாட்டாள் நாகராஜை ஓட விட்ட விஜயகாந்த்! சம்பவம் நடந்தது ஏன்? எப்போது?
ஷூட்டிங்கில் ரகளை செய்த வாட்டள் நாகராஜ் முன்பு தனி ஆளாகப் போய் நின்று, "வாட்டாள் நாகராஜ்னா பெரிய ஆளா நீ... வாடா பார்த்துக்குவோம்" என்று சவால் விட்டாராம் விஜயகாந்த்.
காவிரி பிரச்னை தீவிரமடையும் போது எல்லாம் ரகளையில் இறங்கும் வாட்டாள் நாகராஜை தனி ஒருவனாக விரட்டிய பெருமைக்கு உரியவர் தேமுதிமுக தலைவர் விஜயகாந்த் தான்.
மதுரையைக்காரரான விஜயகாந்த் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், சொந்த காலில் நின்று சினிமாவில் சாதிக்க நினைத்தார். இதற்காக பல தடைகளை எதிர்த்துப் போராடினார். அவருடைய கடின உழைப்பு வீண் போகவில்லை. சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகராக வலம்வந்தார்.
போராடி முன்னுக்கு வந்த விஜயகாந்த் புகழ் வெளிச்சத்துக்கு வந்த பிறகு மிதப்பாக இருந்துவிடவில்லை. கஷ்டப்பட்ட பலருக்கும் கை கொடுத்து உதவி இருக்கிறார். அவரைச் சந்திக்க வரும் எல்லோருக்கும் வயிறாற சாப்பாடு போட்டுதான் அனுப்புவார் கேப்டன். பொருளாதார உதவி கேட்டு வந்தாலும், வெறும் கையோடு அனுப்பாமல் தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்தி மனநிறைவுடன் தான் வழியனுப்புவார்.
சினிமா, நடிப்பு, குடும்பம் என்பதற்கு மேல் சமூக அக்கறையும் கொண்டவர் விஜயகாந்த். ஈழத்தமிழர்கள் இனப்படுகொலையை கண்டித்து தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதற்கும் முக்கியக் காரணமாக இருந்தவர் விஜயகாந்த் தான். இந்த இன உணர்வினால்தான் தன் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி இருக்கிறார்.
இந்நிலையில், பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த தமிழ்ச்செல்வன் பட ஷூட்டிங் கர்நாடக மாநிலம் மைசூர் அருகே கொல்லேகால் பகுதியில் நடந்தது. அப்போது, படக்குழுவினர் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸுக்கு வந்த வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆட்கள் தமிழ் மொழியில் உள்ள க்ளாப் போர்டை பயன்படுத்தக் கூடாது என்று கூறி வம்பு செய்துள்ளனர்.
அப்போது அப்பகுதியில் இருந்த போலீசார் வாட்டாள் நாகராஜைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தச் சூழலில் காரில் அங்கு வந்த விஜயகாந்த் இயக்குநர் பாரதிராஜாவிடம் என்ன பிரச்சினை என்று கேட்டிருக்கிறார். விஷயத்தைச் சொன்னதும் விஜயகாந்த்க்கு கடும் கோபம் வந்துவிட்டது. காரில் இருந்த இரும்புக்கம்பி ஒன்றை எடுத்துக்கொண்டு ஆவேசமாகக் கிளம்பிவிட்டார். வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆட்கள் இருந்த இடத்தில் தனி ஆளாகப் போய் நின்று, "வாட்டாள் நாகராஜ்னா பெரிய ஆளா நீ... வாடா பார்த்துக்குவோம்" என்று சவால் விட்டாராம்.
விஜயகாந்த்தே இப்படி கையில் இரும்புக்கம்பியுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களமிறங்கியதைப் பார்த்து ஷாக் ஆன வாட்டாள் நாகராஜும் அவரது கையாட்களும் வந்த வழியே திரும்பி ஓடிவிட்டனராம். அவர்கள் விரட்டப்பட்ட பிறகு, மறுபடியும் பிரச்சினை வேண்டாம் என்று நினைத்த இயக்குநர் பாரதிராஜா கிளாப் போர்டில் தமிழ்ச்செல்வன் என்று படத்தின் பெயரைப் போடவேண்டாம் என்று சொன்னாராம்.
ஆனால், விஜயகாந்த் அதற்குச் சம்மதிக்கவில்லை. கிளாப் போர்டில் பெயரை நீக்கினால் நான் இந்தப் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார்! அவர் இப்படி திட்டவட்டமாக்க் கூறியதால் வழக்கம்போல படத்தின் பெயருடன் கிளாப் போர்டு பயன்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தைப் பற்றி தமிழ்ச்செல்வன் படத்தின் கதையாசிரியர் ரத்னகுமார் தான் ஒரு பேட்டியில் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.