அமைச்சரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப்பில் பரப்பிய நபர் மற்றும் அந்த வாட்ஸ்அப் குழுவின் அட்மின் இருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள், சோமங்கலம் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர். இந்த குழுவில் 198 பேர் உள்ளனர்.

சோமங்கலத்தைச் சேர்ந்த சகோதரர் இருவர், இந்த வாட்ஸ்அப் குழுவின் அட்மினாகச் செயல்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் படம் ஒன்று வாட்ஸ்அப்பில் ஆபாசமாக பதிவிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படும், வைரலாக பரவியது.

இதனை அடுத்து, வாட்ஸ்அப்பில் அமைச்சரின் ஆபாச படம் வெளியானது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சோமங்கலம் குழுவில் இருந்து பரவியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சோமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அமைச்சரின் ஆபாச படம் கடந்த 20 ஆம் தேதி அன்று பதிவிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

அமைச்சரின் உருவத்தை, போட்டோஷாப்பில் உருமாற்றம் செய்து, அந்த குழுவைச் சேர்ந்த குணசேகரன் என்பவரும் அட்மின் ஆகியோரும் இதனை வெளியிட்டிருந்தது போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, சோமங்கலம் போலீசார், குணசேகரன் மற்றும் அட்மின் ஆகியோரை கைது செய்தனர். தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67 மற்றும் 67 (A) ஆகிய பிரிவுகளின்கீழ் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கும் காவல் துறை எச்சரிக்கை விடுத்தது, மேலும், வாட்ஸ்அப் குழுவில் தவறான தகவல்களை வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தெரிவித்துள்ளார்.