What should be done if the original drivers license is lost - says Additional Police Superintendent ...

கரூர்

அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்து போனால் அதற்கான தொடங்கப்பட்டுள்ள தனி இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசின் உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இதனையொட்டி காவல்துறை சார்பில் மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு முகாம் கரூரில் உள்ள ஒரு விடுதியில் நடந்தது.

இந்த முகாமில் ஆட்டோ, கார் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள், மக்கள் என பலர் பங்கேற்றனர்.

இந்த முகாமிற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார்.

இந்த முகாமில் ஓட்டுநர்கள் தரப்பில் பேசியது:

“அசல் ஓட்டுனர் உரிமத்தை எடுத்துச் செல்லும்போது தொலைந்து போனால் மீண்டும் பெறுவது கடும் சிரமமாகும். பேருந்து, ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் ஓட்டுனர் உரிமத்தை உரிமையாளர்களிடம் கொடுத்து வைத்து உள்ளனர். சிலர் கடனுக்கு பணம் வாங்கிய இடத்தில் ஓட்டுனர் உரிமத்தை அடகு வைத்து உள்ளனர். இதனால், அதை திரும்ப பெறுவதில் சிக்கல் உள்ளது.

கரூர் மாவட்டத்தில் ஓடும் அனைத்து வாகனங்களும் கணக்கெடுக்கப்பட்டு, அந்த வாகனங்களுக்குரிய சான்றிதழ்கள் காவலாளரால் சரிபார்க்கப்பட்டு அதற்கான முத்திரை வில்லையை வண்டியில் ஒட்ட வேண்டும்.

அந்த முத்திரை வில்லைக்கு குறிப்பிட்ட காலம் செல்லுபடியாகும் என நிர்ணயிக்க வேண்டும். இதுவரை ஓட்டுனர் உரிமம் எடுக்காதவர்கள் உரிமம் எடுக்கவும், புதுப்பிக்கவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

வாகன சோதனையின் போது ஓட்டுனர் உரிமத்தை காவலாளர்கள் பறித்து வைத்துக் கொள்ள கூடாது. ஓட்டுனர் உரிமம் தொலைந்துவிட்டால் காவல் நிலையங்களில் புகார் அளித்தால் அதற்கான சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும்.

வயதான ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை. 8-ஆம் வகுப்பு கல்வி தகுதியும் சிலரிடம் இல்லை. ஓட்டுனர் உரிமம் பெற்றிருந்தாலும் பலர் புதுப்பிக்காமல் உள்ளனர். இதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காண வேண்டும்” என்று அவர்கள் பேசினர்.

இதற்கு பதில் அளித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளார், “ஓட்டுனர் உரிமம் தொலைந்து போனால் புகார் தெரிவிக்க தனி இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஓட்டுனர் உரிமம் மட்டுமில்லாமல் பாஸ்போர்ட், வண்டியின் புத்தகம், காப்பீடு உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனாலும் இணையதளம் மூலமாக புகார் அளிக்கலாம்.

அதற்கு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழை கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தவுடன் விரைவாக ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். ஓட்டுனர் உரிமம் பெறாதவர்களுக்கு உரிமம் பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

அடகு வைத்த ஓட்டுனர் உரிமத்தை தர மறுத்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். பேருந்து, லாரி, கார் வாகன உரிமையாளர்கள் அனைவரும் ஓட்டுநர்களிடம் ஓட்டுனர் உரிமத்தை ஒப்படைத்து விட வேண்டும்” என்று அவர் பேசினார்.

முகாமில் துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா, மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில், ஆய்வாளர் செந்தில்குமார், சமூக ஆர்வலர் தீபம்சங்கர் மற்றும் காவலாளர்கள் கலந்து கொண்டனர்.