Asianet News TamilAsianet News Tamil

டிச.1 வருது... குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் வந்திருச்சு... சென்னைக்கு வருதா பேராபத்து..?

what is the real weather forecast in dec 1 by weatherman and meteorological department
what is the real weather forecast in dec 1 by weatherman and meteorological department
Author
First Published Nov 29, 2017, 2:01 PM IST


டிசம்பர் மாதம் வந்தாலே, சென்னை வாசிகள் அலறத் தொடங்கிவிடுகிறார்கள். முன்னர் டிசம்பர் சீஸன் என்று மழைக் கால இசைக்கச்சேரிகளை ரசித்துக் கொண்டு ஒரு தரப்பு இருந்து வந்தது. இப்போது, எல்லாத் தரப்புமே டிசம்பர் வந்துவிட்டால் சுணங்கத் தொடங்கி விடுகிறார்கள். 

அதற்கு கடந்த கால அனுபவங்கள்தான் காரணமாகியுள்ளன. அதுவும் சென்ற ஆண்டு இதே டிசம்பரில் புயல் கோரத்தையும், அதற்கு முன்னர் மழையின் கோர தாண்டவத்தையும் கண்டு விட்டார்கள் சென்னைவாசிகள். அதற்கு முன்னர் அச்சாரமாக அமைந்தது அதற்கும் பத்து வருடங்களுக்கு முன் நடந்த சுனாமி. 

இப்படி, டிசம்பர் மாதம் தொடங்கிவிட்டாலே மக்களின் ஈரக்குலையை நடுங்க வைக்கும் அளவுக்கு இயற்கைச் சீற்றங்கள் கண் முன்னே உலவுகின்றது. இப்போதும், நிலநடுக்கம், சுனாமி, கன மழை, புயல், வெள்ளம் என டிசம்பர் மாதம் தொடங்கும் முன்பே மக்களுக்கு எச்சரிக்கை செய்திகள் ஏராளமாக துரத்துகின்றன.

முன்னர் வெறும் பத்திரிகைச் செய்திகளையும், ஊடகங்களையும் மட்டுமே பார்த்து வந்த மக்களுக்கு, இப்போது சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவையும் துரத்தோ துரத்து என்று துரத்தி கதி கலக்க வைக்கின்றன. மக்கள் எதை நம்புவது, எதை நம்பக் கூடாது என்றெல்லாம் யோசித்துப் பார்க்கக் கூட நேரமில்லாமல், தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன பகீர் செய்திகள்.  

சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் செய்திகள் ஒருபுறம் என்றால், இப்போது புதிதாக, தமிழ்நாடு வெதர்மேன் என ஒருவர் வானிலை ஆய்வு மைய தரவுகளை வைத்துக் கொண்டு தனது மழை, புயல் குறித்த எச்சரிக்கைகளை சமூக தளங்களில் பதிவுகளாகக் கொடுத்து வருகிறார்.

டிசம்பர் மாத தொடக்கம் வந்துவிட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு வெள்ளமோ, புயலோ தாக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் அளித்துள்ள சிறப்புப் பதிவில்,

தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு நல்ல மழை வாய்ப்பு இருக்கும். அதே நேரம் சென்னையில் இன்று இரவு அல்லது நாளை முதல் டிசம்பர் 1ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இன்று இரவு அல்லது நாளை காலை முதல் மிதமான மழை வாய்ப்பு உள்ளது. 

முக்கடல் பகுதியில் இருக்கும் ஈரப்பதத்தை இழுப்பதன் மூலம் கிடைக்கும் மழை என்பதால் டிசம்பர் 1ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு இல்லை.  எனவே, இன்று இரவோ அல்லது நாளை காலையோ மழை தொடங்கும். நாளை மழை பெய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் கவலைப்பட எதுவுமே இல்லை.  சென்னைக்கான மழை வாய்ப்பு எப்போது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஏனென்றால், சென்னைக்கு எந்த மழையாக இருந்தாலும் அது சிறப்புதான் என்று கூறியுள்ளார். 

எனவே, டிசம்பர் 1ம் தேதி அன்று புயலுக்கு வாய்ப்பு இல்லை என்று கூறுவது, சென்னைவாசிகளுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுவதாகத்தான் அமைந்திருக்கும். 

அதே போல், சென்னை வானிலை ஆய்வு மையமும் புயல் வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளது. இருப்பினும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அது வேண்டுகோள் விடுத்துள்ளது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios