திருட்டு விசிடிக்களை ஒழிக்க வேண்டும் என நடிகர் விஷால் புகார் அளித்த சிலமணி நேரங்களிலேயே போலீசார் 2100 புதுப்பட டிவிடிக்களை பறிமுதல் செய்து 16 பேரை கைது செய்துள்ளனர்.

திரையுலகத்தின் பல்வேறு நிஜ கதாபாத்திரங்களில் நடிகர் விஷால் வளம் வருகிறார். நடிகர் சங்கத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக கூறி தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி கொண்டார். அதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நின்றும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், திரையுலகினர் பாதிக்கபடாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதில் ஒரு பகுதியாக திருட்டு விசிடிக்களை ஒழிக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார் நடிகர் விஷால்.

அந்த மனுவில் கடந்த 28 ஆம் தேதி பாகுபலி 2 திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் படம் வெளியாகி விட்டது.

மேலும் பல படங்கள் அந்த இணையதளத்தில் வெளியாகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் பெரிது நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். திருட்டு விசிடிக்களும் புழக்கத்திற்கு வந்துள்ளன.

எனவே இவற்றை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கபட்டிருந்தது.

இதைதொடர்ந்து விஷால் புகார் கொடுத்த சில மணி நேரங்களிலேயே சென்னையின் பல பகுதிகளில் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு அதிகாரிகள் களத்தில் குதித்தனர்.

காவல் ஆய்வாளர்கள் தலைமையில், 300 போலீசார்களை குவித்து 11 தனிப்படை அமைத்து பர்மா பஜார், சவுகார் பேட்டை, அண்ணா நகர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மண்ணடியை சேர்ந்த காஜா என்பவரின் கடையில் பாகுபலி 2 திரைப்பட டிவிடி 10 க்கும் மேற்பட்ட டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வியாசர்பாடியை சேர்ந்த மொய்தீன், மகாகவி பாரதியார் நகரை சேர்ந்த ஆசீப் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் திருட்டு விசிடி சோதனையில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2100 டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில், பாகுபலி 2, கவன், டோரா உள்ளிட்ட பல்வேறு புதுப்பட டிவிடிக்கள் கைப்பற்றப்பட்டன.