Asianet News TamilAsianet News Tamil

எந்தெந்த துறைகளில் என்னென்ன வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது? துறைவாரியாக அமைச்சர் ஆய்வு...

What development projects are being implemented in which areas? Minister reviewed ...
What development projects are being implemented in which areas? Minister reviewed ...
Author
First Published Mar 17, 2018, 6:23 AM IST


திருப்பூர் 

திரூப்பூரில் அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஒவ்வொரு துறைவாரியாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார்.

திருப்பூர் மாவட்டத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் திருப்பூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று காலை நடைப்பெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன்(திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), விஜயகுமார்(திருப்பூர் வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஒவ்வொரு துறைவாரியாக அமைச்சர் ஆய்வு நடத்தினார்.

மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரி சக்திவேல் தெரிவித்தார். 

அப்போது எம்.எல்.ஏ.க்கள், "தங்கள் தொகுதிகளில் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் வசதி, தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அதிகளவில் மனுக்கள் கொடுத்து வருகிறார்கள். 

தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டாலும் போதுமானதாக இல்லாததால் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினர்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், "திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் காலனி பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி அதிகப்படியாக மனு வருகிறது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வாரியாக உள்ள ஆதிதிராவிடர் காலனியை கணக்கெடுத்து அங்கு செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகளுக்கான திட்டமதிப்பீடுகளை தயாரிக்க வேண்டும். அந்த பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும்" என்று கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி முருகேசன், "காது கேட்காத, வாய்பேச முடியாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டு, வாய் பேசுவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 

இந்த பயிற்சியின் பயனாக குழந்தைகள் பேசும் திறன் வளர்ச்சி அடைந்துள்ளது. இதுபோல் கடந்த மாதம் 4 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து பேச்சுப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது" என்றார். 

"மாவட்டத்தில் இதுபோன்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து பேச்சுப்பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யுமாறும், இதுதொடர்பாக அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கும் தகவல் தெரிவித்து பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

சமூக நலத்துறை அதிகாரி பூங்கோதை, "திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் மாவட்டத்தில் 5943 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 2700 பேருக்கு நிதி உதவி மற்றும் தங்கம் வழங்கப்பட்டுவிட்டது. 3243 பேருக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்க வேண்டியுள்ளது. 

விண்ணப்பித்தவர்களில் 89 பேர், பெற்றோர் வருமான சான்றுக்கு பதிலாக பயனடையும் பெண்களின் வருமானத்தை குறிப்பிட்டு கொடுத்துள்ளனர். அதனால் அந்த 89 பேருக்கும் தங்கம், நிதி உதவி தயாராக இருந்தும் வழங்க முடியாமல் உள்ளது" என்று கூறினார். 

இதற்கு அமைச்சர், "திருமாங்கல்யத்துக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் பயனாளிகள் பெண்கள்தான். பெற்றோரின் வருமான சான்றிதழ் பெற்றுக்கொண்டு  89 பேருக்கும் திருமண நிதி உதவி மற்றும் தங்கம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே சென்னையில் உயரதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் தாமதமின்றி வழங்குங்கள்" என்று கூறினார். 

திருப்பூர் மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் பெரும்பாலும் ஓட்டு மேற்கூரையில் செயல்பட்டு வருகிறது. பழுதடைந்த கட்டிடங்களில் செயல்படும் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்றால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் போதுமான நிதி இல்லை. இதனால் அந்த பள்ளிகளை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து, நகராட்சி மூலமாக சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ., குணசேகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூறினார்கள். 

"நகராட்சி பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை நகராட்சி வசம் ஒப்படைப்பதற்கான பணிகளை கல்வித்துறையுடன் இணைந்து செய்யுங்கள்" என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

பின்னர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் கோடையை சமாளிக்கும் வகையில் மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார். 

இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா, மாநகர துணை ஆணையர் கயல்விழி, மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாநகராட்சி ஆணையாளர் அசோகன், உதவி ஆய்வாளர்கள் ஷ்ரவன்குமார் (திருப்பூர்), கிரேஸ் பச்சாவு (தாராபுரம்), மாவட்ட வன அதிகாரி முகமது சபாப் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios