What are the rules for crackers vendors people? collector Explain ...

சேலம்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் விளக்கினார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை தடுக்க பொது நல வழக்கு ஒன்றி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2005-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளன.

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் தயாரிப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தக்க விழிப்புணர்வு வேண்டும்” எனவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

அதன்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆண்டுதோறும் மக்கள் மற்றும் மாணவ மாணவியருக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு குறித்தும், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்தாண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், தீபாவளிக்கு முன்தினம் மற்றும் தீபாவளி தினம் ஆகிய இரண்டு நாள்களில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், ஓசூர் மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் ஒலி மற்றும் காற்று மாசு அளவீடு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை:

தயாரிக்கப்படும் பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப் பொருள்கள் மற்றும் ஒலி அளவின் விவரத்தை பட்டாசு பேக்கிங் பெட்டியில் குறிப்பிட வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் ஒலி அளவானது நான்கு மீட்டர் துரத்தில் 125 டெசிபல் அல்லது 145 டெசிபல் அளவுக்கு அதிகமாக ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:

125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்படாத பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது.

மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்கக் கூடாது. 125 டெசிபல் அளவிற்கு கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும்.

தீபாவளி பண்டிகை குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குடும்பத் திருவிழா. அதனால் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் பாதுகாப்பாகவும் ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச் சூழலுக்குகந்த தீபாவளியினைக் கொண்டாட வேண்டும்” என்றுஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.