- Home
- Politics
- Archana Kalpathi: திரிஷாவின் நெருங்கிய தோழிக்கு அரசுப் பதவி.! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக அரசு.!
Archana Kalpathi: திரிஷாவின் நெருங்கிய தோழிக்கு அரசுப் பதவி.! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக அரசு.!
Archana Kalpathi: நடிகை திரிஷாவின் நெருங்கிய தோழியும், திரைப்பட தயாரிப்பாளருமான அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு முக்கிய பதவி ஒன்றை வழங்கியுள்ளது. இது தமிழக அரசியில் களத்தில் புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முதல்வர் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு அரசுப் பதவி
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசு அமைந்தது முதல் அரசுப் பதவிகள் நெருங்கியவர்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே விஜயின் தனிப்பட்ட ஜோதிட ஆலோசகர் ரத்தன் பண்டிட் முதல்வரின் தனி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அவரது நியமனம் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்வரின் நெருங்கிய நண்பரான ஜெகதீஷ் பழனிச்சாதி முதல்வரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். முதல்வர் விஜயின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கே.வி வெங்கட்ரமணா தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
அர்ச்சனா கல்பாத்தி நியமனம்
இந்த நிலையில் விஜய் நடித்த ‘பிகில்', ‘கோட்' போன்ற படங்களை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழ்நாடு அரசு முக்கிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் உள்ள திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் சிறப்பு குழுவின் உறுப்பினராக அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவின் பணிகள் என்ன?
இந்தக் குழு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய ஸ்வாமிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவில் அர்ச்சனா கல்பாத்தி உறுப்பினராக இடம் பெற்றுள்ளார். இந்த குழுவின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இந்த குழு, இந்து சமய அறநிலையத்துறை கொடைகள் சட்டம் 1959 படி, இது பெரிய திருக்கோயில்களுக்கு தகுதியும் ஆன்மீக ஈடுபாடும் கொண்ட அறங்காவலர்களை விண்ணப்பங்கள் அடிப்படையில் பரிசீலித்து தகுதியான பெயர் பட்டியலை அரசுக்கு பரிந்துரைக்கும் பணிகளை செய்யும்.
புதிய குழுவின் உறுப்பினர்கள்
தற்போது உள்ள குழுவின் பதவிக்காலம் ஜூலை 24, 2026 ஆம் தேதியுடன் முடிவுற்றதையடுத்து புதிய குழுவை அமைக்க அறநிலையத்துறை ஆணையர் கேட்டுக்கொண்டார். இவரின் பரிந்துரை ஏற்று கீழ் கண்ட உறுப்பினர்களைக் கொண்ட மாநில குழுவினை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தலைவராக மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகளும், துணைத்தலைவராக ஓய்வு பெற்ற மாவட்ட அமர்வு நீதிபதி டாக்டர் கே ராமநாதனும், இடம்பெற்றுள்ளனர். அர்ச்சனா கல்பாத்தி, ஓய்வு பெற்ற இந்தியா ஆட்சிய பணியாளர் ப.ரா சம்பத், திருமதி. மா. சுமதி ஸ்ரீ, பிரபல பின்னணி பாடகர் டாக்டர் த வேல்முருகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோரும் உறுப்பினராக இடம் பெற்றுள்ளனர்.

