Were getting harder without water Village villagers in the struggle to demand action ...

விழுப்புரம்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

செஞ்சி அருகே தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும், தண்ணீருக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெற்றுக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கப்பை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு அங்குள்ள இரண்டு ஆழ்துளை கிணறுடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பருவமழை பொய்த்துப் போனதால் கப்பை கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டன. இதனால் ஆழ்துளை கிணறுகளில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்ற முடியாத நிலை உருவானது. இதனால், கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணி பாதித்தது.

குடிநீருக்காக மக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு வெற்றுக் குடங்களை தூக்கிக் கொண்டு அலைந்து திரிந்து சொற்ப அளவிலேயே தண்ணீர் கொண்டுவருகின்றனர். பக்கத்து ஊரிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்த பின்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று கப்பை கிராமத்தைச் சேர்ந்த மக்கள், வெற்றுக் குடங்களுடன் தண்ணீர் கேட்டு செஞ்சி - திருவம்பட்டு சாலையில் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலறிந்த செஞ்சி காவல் ஆய்வாளார் அரிகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள், “எங்கள் ஊரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்த்து சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் பெரும் அவதி அடைந்து வருகிறோம்.

எனவே எங்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” என்று கேட்டனர்.

இதனையடுத்து அதிகாரிகள், “கப்பை கிராமத்தில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் அனைவருக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்கப்படும்” என்று உறுதி தெரிவித்தனர்.

அதையேற்று கிராம மக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.