கொள்ளையடிக்க சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், வீட்டை தீ வைத்து எரித்துவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோழவரம் அடுத்த ஒருக்காடு பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கலாதேவி (60), தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் வேலை செய்பவர்கள், கடந்த 4 நாட்களாக வேலைக்கு வரவில்லை. இதனால் கலாதேவி, தனது வீட்டை பூட்டி கொண்டு, அதேபகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இரவில் தூங்கி வந்தார்.

நேற்று முன்தினம் கலாதேவி, வழக்கம்போல் உறவினர் வீட்டில் தூங்க சென்றார். இதை அறிந்த மர்மநபர்கள், நள்ளிரவில் அவரது வீட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த பீரோ உள்பட அனைத்தையும் உடைத்து சோதனை செய்தபோது நகை, பணம் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த மர்மநபர்கள், அங்கேயே மது அருந்திவிட்டு, வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் தீ வைத்து எரித்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். 

நள்ளிரவில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியதால், பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.வெளியே வந்து பார்த்தபோது, கலாதேவியின் வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் திரண்டு, தீயை அணைத்தனர். அதற்குள், அங்கிருந்த கட்டில், பீரோ, துணி மணிகள், டிவி, மின்விசிறி உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. இதையறிந்ததும், அங்கு வந்த கலாதேவி வீடு தீப்பற்றி எரிவதை கண்டு கதறி அழுதார்.

புகாரின்படி சோழவரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும், அதே பகுதியில் உள்ள சில வீடுகளையும் மர்மநபர்கள் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், எந்த பொருளும் சிக்கவில்லை என தெரிந்தது.