Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் கியாரண்டி பிரசாரத்திற்கு கிடைத்த வரவேற்பு! முதல்வர் ஸ்டாலினுக்கு தூக்கம் போச்சு! வானதி சீனிவாசன்!

தமிழ்நாட்டில் திமுக – அதிமுக இடையேதான் போட்டி. பாஜக களத்திலேயே இல்லை என்று திமுகவினர் மேடைதோறும் முழங்கி வருகிறார்கள். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் பிரசார பொதுக்கூட்டங்களில் ஒரு மணி நேரம் பேசினால், அதில் 50 நிமிடங்கள் பாஜகவைப் பற்றி, பிரதமர் மோடியைப் பற்றிதான் பேசுகிறார்.

Welcome to the PM Guarantee campaign! CM has kept Stalin awake..vanathi srinivasan tvk
Author
First Published Mar 31, 2024, 8:54 AM IST

திமுக என்னதான் பொய் பிரசாரம் செய்தாலும் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராவதை தடுக்க முடியாது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் திமுக – அதிமுக இடையேதான் போட்டி. பாஜக களத்திலேயே இல்லை என்று திமுகவினர் மேடைதோறும் முழங்கி வருகிறார்கள். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் பிரசார பொதுக்கூட்டங்களில் ஒரு மணி நேரம் பேசினால், அதில் 50 நிமிடங்கள் பாஜகவைப் பற்றி, பிரதமர் மோடியைப் பற்றிதான் பேசுகிறார்.

இதையும் படிங்க: எதுக்கு ஸ்டாலின் வெற்றுக் கூச்சல் போடுறீங்க! மோடியை ஊழல்வாதி சொன்னீங்கனா இதுதான் நடக்கும்! வானதி சீனிவாசன்!

1972-இல் இருந்து திமுக எதிர் அதிமுக என்றிருந்த தமிழ்நாடு அரசியல் களம், இப்போது, பாஜக எதிர் திமுக என மாறியுள்ளது. முதலமைச்சர் தேர்தல் பிரசார உரைகள் அதைத்தான் காட்டுகின்றன. இனி பாஜகவைச் சுற்றி தமிழ்நாடு அரசியல் நடக்கும் என்பதை உணர்ந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. மார்ச் 27ம் தேதி விருதுநகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சமூக நீதி பற்றி பாடம் எடுத்திருக்கிறார். குலக்கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கை, ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு என்று காலமெல்லாம் செய்யும் அவதூறு பிரசாரத்தை செய்திருக்கிறார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையில் குலக்கல்வி இல்லை.

ஆனால், குலத்தின் அடிப்படையில், அதாவது பிறப்பின் அடிப்படையில் கட்சித் தலைமை பதவியை நிரப்பும் முறை திமுகவில் இருக்கிறது. தந்தை - மகன் - பேரன் கட்சி இப்போது கொள்ளுப் பேரன் இன்பநிதியையும் ஏற்போம் என மூத்த அமைச்சர்களே பேசும் நிலைக்கு சென்றிருக்கிறது. இப்படி குடும்ப கட்சியை நடத்திக் கொண்டு, குலக்கல்வி என்று பேசுவதைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் நகைத்துக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் என்பது, பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அம்சம். அதைத்தான் தனது சாதனையாக முதலமைச்சர் ஸ்டாலின் முழங்கிக் கொண்டிருக்கிறார்.

69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பில்லாத, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு வித்திட்ட, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்டிய நீட் தேர்வை தமிழக மக்களும், மாணவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடந்தபோது கோடிகளை குவித்த தனியார் மருத்துவக் கல்லூரிகள்தான் நீட் தேர்வை எதிர்க்கின்றன. திமுகவில் இருப்பவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளை நடத்துவதால் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை இனியும் மறைக்க முடியாது.

சீனாவில் இருந்து பட்டாசுகள் வருவதை பாஜக அரசால் தடுக்க முடியவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியபோது, திமுக அமைச்சர் ஒருவர் சீனக்கொடி பொறிக்கப்பட்ட அந்நாட்டு ராக்கெட் படத்துடன் நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கிறார். இதுபற்றி கேட்டால், சீனா என்ன எதிரி நாடா என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் எதிர் கேள்வி கேட்கிறார்கள். இப்படி சீனத்தின் மீது விசுவாசத்தை காட்டி விட்டு, சிவகாசி பட்டாசு தொழிலுக்காக உருகுவது போல முதலமைச்சர் ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

இதையும் படிங்க: எங்களை விட அதிக நிதி பெற்றுவிட்டு பாஜக மீது அவதூறு! எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! வானதி

இந்திய வணிகத்தில் சீனாவில் ஆதிக்கத்தை மேக் இன் இந்தியா உள்ளிட்ட திட்டங்களின் மூலம் பாஜக அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அதற்கு பெரும் பலன் கிடைத்து வருகிறது. எனவே, அதுபற்றி முதலமைச்சர் ஸ்டாலின் கவலைப்பட வேண்டாம். மோடியின் கியாரண்டி பிரசாரத்திற்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு முதலமைச்சர் ஸ்டாலினை தூங்க விடாமல் செய்து வருகிறது. அதனால்தான், வாய்க்கு வந்தபடியெல்லாம் அதை விமர்சித்து வருகிறார். திமுக என்னதான் பொய் பிரசாரம் செய்தாலும் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராவதை தடுக்க முடியாது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios