தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்புள்ளதாகவும் வரும் 6 ஆம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று வங்ககடலின் மத்திய பகுதி மற்றும் பூமித்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். இதன் காரணமாக

03.03.2022: கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் , உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

04.03.2022: கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யும். டெல்டா மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

05.03.2022: கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெருன்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை , அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளன.

06.03.2022: கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களீல் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 
கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளன.

07.03.2022: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளன.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளன. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளன. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.