சென்னையின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலு அவ்வப்போது மழை பெய்தாலும், சென்னையில் கடந்த 5 நாட்களாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவில் வெப்பம் பதிவானது. இதனால் கடும் வெயிலால் மக்கள் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சைதாப்பேட்டை, வடபழனி, கிண்டி, அசோக்நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே போல் பூந்தமல்லி, வண்டலூர், சிங்கப்பெருமாள் கோயில் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில மணி நேரங்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது பெய்து வரும் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையேநீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
