தென் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது நகர்ந்து,கொல்கத்தாவுக்கு தென்மேற்கு திசையில் 470 கி.மீ. தூரத்தில் சென்றது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்துக்குச் சென்று வலுவிழக்கும் என்றும், 
இதன் காரணமாக, தமிழகத்தில் மழை குறையும். நவம்பர் 11-ஆம் தேதிக்குப் பின்னரே தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்தது.

இந்நிலையில், தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமானுக்கு தெற்கே மேலடுக்கு காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் படிப்படியாக மழை பெய்யும் வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே போல் அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே உருவான மேலடுக்கு சுழற்சி தற்போது மாலத்தீவு வரை பரவியுள்ளது. எனவே, தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை மேலும் தீவிரம் அடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.