விழுப்புரம்

தமிழகத்திற்கு தேர்தல் வந்தால் அதனை சந்திக்க 234 தொகுதிகளிலும் நாங்கள் தயாராக உள்ளோம். எந்த தொகுதியை எங்களுக்கு தந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு காங்கிரசு கட்சியின் துணைத் தலைவரும் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் நேற்று வருகை தந்தார்.

அவர் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர், ராஜீவ்காந்தி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “தமிழகத்தின் தலையெழுத்து விரைவில் தெரிந்துவிடும். திமுக மற்றும் காங்கிரசு கட்சி உறுப்பினர்களை ஆளுநர் சந்தித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் ஆட்சி மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் விவசாயிகள் கடும் சிரமத்தில் உள்ளனர். குளங்களை தூர்வாரும் பணிகளில் பெரிய அளவிலான முறைகேடு நடைபெற்று வருகிறது. கால்வாய்கள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்க வேண்டும்.

தமிழக மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். அனைத்து ஒப்பந்தங்களிலும் அதிக அளவில் ஊழல் நடைபெறுகிறது. ஆட்சியாளர்கள் மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகின்றனர். அநேகமாக ஒரு வாரத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறலாம்.

ஆட்சியை தக்க வைக்கவே அதிமுக-வினர் சண்டை போட்டுக் கொள்கின்றனர். டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை எளிதில் தகுதி நீக்கம் செய்ய முடியாது. அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளது.

தமிழகத்திற்கு தேர்தல் வந்தால் அதனை சந்திக்க 234 தொகுதிகளிலும் நாங்கள் தயாராக உள்ளோம். எந்த தொகுதியை எங்களுக்கு தந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். விரைவில் தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியைப்போல் ஒரு நல்லாட்சி மலரும்” என்று அவர் கூறினார்.