We will siege governor building if favor judgement not come on 8th day
திருவாரூர்
காவிரி வழக்கில் வருகிற 8-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையென்றால் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம் என்று விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரைமாணிக்கம் தெரிவித்தார்.
காவிரி வழக்கில் வருகிற 8-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை என்றால் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம் என்று திருவாரூரில் விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரைமாணிக்கம் தெரிவித்தார்.
திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நிர்வாகி பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் செல்வராசு, சங்கத்தின் மாநில செயலாளர் மாசிலாமணி, மாவட்ட செயலாளர்கள் சம்பந்தம் (நாகை), பாலசுந்தரம் (தஞ்சை), மாதவன் (புதுக்கோட்டை), சிவசூரியன் (திருச்சி), சேகர் (கடலூர்), தெய்வசிகாமணி (அரியலூர்) உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "காவிரி நீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் பல காலக்கெடுக்களை கொடுத்தும் வழக்கம்போல் கடந்த 3-ஆம் தேதியன்று நடந்த விசாரணையில் மேலாண்மை வாரியம் வரைவு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு 10 நாட்கள் அவகாசம் மத்திய அரசு கேட்டுள்ளது.
தமிழகத்திற்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு எச்சரிக்கை விடுத்து வழக்கு விசாரணையை வருகிற 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தண்ணீரை தர முடியாது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தண்ணீரை பெறுவதற்கும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு மௌனம் சாதித்து வருகிறது.
காவிரி வழக்கில் வருகிற 8-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லையென்றால் அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம்.
கர்நாடக அரசு இதுவரை தமிழகத்திற்கு 65 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டியுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றமோ தமிழகத்திற்கு உடனடியாக 4 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த நீரை வைத்து தமிழகத்தில் விவசாயம் மேற்கொள்ள முடியாது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது" என்று அவர் கூறினார்.
