தூத்துக்குடி ஆலை, பராமரிப்பு காரணமாக மூடப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் மற்றும் அரசிடம் இருந்து உத்தரவைப் பெற்று ஆலை மீண்டும் திறக்கப்படும் என ஆலையின் நிறுவனர் அனில் அகர்வால் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய பேரணியின்போது, போலீசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. பல்வேறு வாகனங்கள், ஆட்சியர் அலுவலகம் சூறை என பல்வேறு கலவரங்கள் நடந்த நிலையில், போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றர். 

போலீசாரின் துப்பாக்கிசூட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தூத்துக்குடியில் போராட்டத்தை ஒடுக்க துணை ராணுவம் வந்துள்ளது. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சாரம் நிறுத்தப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழகம் மட்டுமால்லாது பெங்களூரு மற்றும் லண்டனிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி மட்டுமல்லாது தமிழகமே கொந்தளித்துப் போயுள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனர் அனில் அகர்ல் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், தூத்துக்குடியில் மக்கள் உயிரிழந்தது சோகமான நிகழ்வு. அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். பராமரிப்பு பணிக்காக ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. நீதிமன்றம் மற்றும் அரசிடமிருந்து உத்தரவைப் பெற்று ஆலை மீண்டும் திறக்கப்படும் என அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உயிரிழப்புகளும், போராட்டங்களும் நடந்து வரும் நிலையில், ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று அனில் அகர்வால் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.