கடலூர்

குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் ஆட்சியரகம் வந்த மக்கள் ஆட்சியரிடத்தில் கொடுத்த மனுவில், குடிநீர் பிரச்சனையை தீர்க்காவிட்டால் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தலைமை வகித்தார். இதில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

காடாம்புலியூர் அருகே உள்ள வேகாக்கொல்லையைச் சேர்ந்த மக்கள், குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று வெற்றுக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அவர்கள் கொடுத்த மனுவில், “கடந்த ஆண்டு முதல் வேகாக்கொல்லை ஊராட்சியின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. காலை எழுந்தவுடன் தண்ணீருக்காக சிறியவர் முதல் பெரியவர் வரை குடத்துடன் அலையும் அவலம் நிலவுகிறது.

இதற்காக வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு கொடுத்தும், சாலை மறியல் வரை செய்து பார்த்தும் தீர்வு கிடைக்கவில்லை. இனியும் இதற்கு தீர்வு காணப்படவில்லையெனில் குடிநீருக்காக தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் என்பதை கூறிக் கொள்கிறோம்.

பாடசாலை, வடக்குத்தெரு, கிழக்குத்தெரு, ஐயனார் கோவில் தெரு, வே.புதூர், வே.சத்திரம் ஆகிய இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ஓடைகள், குளங்கள், குட்டைகளையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறியுள்ளனர்.

அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் ராஜேஷ் உறுதியளித்தார்.